Saturday, March 19, 2011

கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பாலு மகேந்திரா


வழக்கமாக அலுவலகம் விட்டவுடன் பள்ளி மாணவனைப் போல் வீட்டுக்கு ஓடிவிடும் நான், நேற்று கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பாலு மகேந்திரா அவர்களால் ஓட முடியாமல் ஈர்க்கப்பட்டேன்.

எங்கள் அலுவலக தோழரும், பிரபல எழுத்தாளரும், பதிவருமான பாலு சத்யாவின் சீரிய முயற்சியால் பாலு மகேந்திரா கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தார்.

படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று அறபுதமாக விளக்கினார். எழுத்தை விட அந்த எழுத்தை படமாக்குவது எவ்வளவு கடினம் என்பதை எளிமையான உதாரணங்கள் மூலம் சிறப்பாக விளக்கினார்.

’இவ்வளவு கடினமான பணியை மேற்கொள்ளும் எங்களை நல்ல சினிமா ஏன் கொடுப்பதில்லை என்று கேட்காதீர்கள். உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள்’ என்றார். அப்படி கேட்பவர்கள் வந்து களத்தில் இறங்கி கதை தயார் செய்து படமாக்கிப் பாருங்கள் தெரியும் என்றார்.

பாலு மகேந்திராவின் அனைத்து படங்களும் சிறப்பானவை. அவரை நல்ல சினிமா கொடுக்க வில்லை என்று யாரும் கேட்க முடியாது.

ஆனால் மோசமான படங்கள் கொடுப்பவர்களைப் பார்த்து ஏன் நல்ல சினிமா கொடுங்கள் என்று கேட்கக் கூடாது? என்பதுதான் என் கேள்வி.

சினிமா துறையை விரும்பி தேர்ந்தெடுத்து வருபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அப்படி அந்தத் துறையில் கால் பதித்தவர்களைப் பார்த்து கேட்காமல் மற்றத் துறையில் இருப்பவர்களையா கேட்க முடியும்?

வெள்ளிக்கிழமை தோறும் புதிய படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் 100க்கு 10 கூட ஓடுவதில்லை. இப்படி இருக்கும்போது நல்ல படம் வரவில்லையே என்ற மக்களின் ஏக்கம்தான் இவ்வாறு கேட்க வைக்கிறது.

ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஆதங்கமும் எதிர்பார்ப்பும்தான், தலைவர்களையும், கலைஞர்களையும் உருவாக்குகிறது என்று படித்திருக்கிறேன். நல்ல படம் வரவில்லையே என்ற பெரும்பான்மையான மக்களின் ஆதங்கம் நான்கு பாலு மகேந்திராக்களை உருவாக்கினால் நல்லதுதானே.

1 comment: