Wednesday, July 3, 2013

இந்தியாவின் சமீபத்திய கிரிக்கெட் தோல்வி

மேற்கு இந்திய தீவு மற்றும் இலங்கையுடனான ஆட்டத்தில் இந்தியா தோற்றது வருத்தமாக இருக்கிறது. முன்பு தோற்றால் சச்சின் இல்லை என்பார்கள் இப்போது தோணி இல்லை என்று கூறுவது யாராவது ஒருவர் முதுகில் சுமையை ஏற்றவிடுவத போல் உள்ளது.

Monday, April 4, 2011

உலகக்கோப்பை 2011 – இறுதி போட்டி

இலங்கைக்கு இறுதி சடங்கு செய்து வைத்த இந்தியா

இறுதிப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டபோதே தெரிந்து விட்டது இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்று. காரணம், இலங்கை அணியின் தேர்வில் பயங்கர குழப்பம் இதுவரை இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டிக்கூட ஆடாத கபுடகேரா, ரந்தீவ் இருவரையும் அந்த அணி களம் இறக்கியதுதான்

இறுதிப் போட்டிக்கு முன்பு வரை நன்றாக ஆடிக் கொண்டிருந்த அந்த அணியின் மெண்டீஸ், ஹராத் இருவரையும் பெவிலியனில் உட்கார வைத்து மிகப் பெரிய தவறை செய்தது இலங்கை.

டாஸில் டோனி தான் முதலில் ஜெயித்தார் ஆனால் ஆட்ட நடுவருக்கு சரியாக கேட்கவில்லை என்ற காரணத்தால் மறுபடியும் டாஸ் போடப்பட்டு இலங்கை ஜெயித்தது. இதனால் இந்திய அணிக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டனர். இயல்பாக ஆடாமல் விக்கெட் விழாமல் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தியும் விரைவில் அவுட் ஆகி போனார்கள்.

கடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றவுடன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த ஜெயவர்த்தனே அதற்கு சொன்ன காரணம், அடுத்த உலகக் கோப்பையை பெற வேண்டுமென்றால் இப்போதிருநதே தயாராக வேண்டும் அதற்கு தகுதியானவர் சங்ககாரா என்று சொன்னார். அப்படிப்பட்டவர் நேற்று எவ்வளவு ஏமாற்றம் அடைந்திருப்பார்.

ஜெயவர்த்தனேவின் அருமையான ஆட்டம் இந்தியாவின் வெற்றியினால் வீணாகிப் போனது.

இந்திய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகள் பறி போனதும் அனைத்து ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தாலும பின்னர் கம்பீர், டோனியின் சிறப்பான ஆட்டம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு அம்சமாகும்.

கடந்த ஒன்றரை மாதங்களாக நம்மை மகிழ்சசியில் ஆழ்த்திய உலகக் கோப்பை திருவிழா முடிந்து போனாலும், இந்திய அணி நம் மனதில் ஏற்படுத்திய சந்தோஷம் எனும் வடு நிரந்தரமாக இடம் பெற்று விட்டது.

Thursday, March 31, 2011

உலகக்கோப்பை 2011 – முதல் மற்றும் இரண்டாவது அரைஇறுதி

நியூசிலாந்து இலங்கை

முதல் அரை இறுதியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி சிறப்பான துவக்கம் இல்லாவிட்டாலும் 43 ஓவர் வரை நன்றாகவே விளையாடினார்கள். பின்னர் என்னவாயிற்றோ தெரியவில்லை மலிங்கா காலை பார்த்து வீசிய பந்துக்கெல்லாம் அவுட் ஆனார்கள்.

ட்ரிபிள் எம் என்று சொல்லப்படும் முரளிதரன், மலிங்கா, மெண்டீஸ் மூவரின் பந்து வீச்சும் அபாரமாக உள்ளது.

கால் இறுதியில் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய நியூசிலாந்து முக்கியமான இந்த அரை இறுதியில் அதை செய்ய தவறி விட்டார்கள்.

முதல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் போதும் இலங்கை அணி திணறி விடும். அது இந்த ஆட்டத்தில் வெளிப்படையாக தெரிந்தது. இன்னும் 50 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகு இந்த முறையும் இலங்கை அணி தடுமாறி போனது.

இந்த இடத்தில் இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் சமரவீராவும், மேத்யூசும் சேர்ந்து நிலைமையை சமாளித்து தங்கள் அணி வெற்றி பெற உதவினர். முக்கியமான இந்த கட்டத்தில் நியூசிலாந்து விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இறுந்திருக்கும்.

இந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம் இல்ங்கை அணி இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த அணியில் தற்போது முரளிதரன், மேத்யூஸ் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் இறுதி போட்டியில் இடம்பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி அவர்கள் விளையாட முடியாத பட்சத்தில் சமிந்தா வாஸ் மற்றும் ரந்தீவ் இருவரையும் சேர்க்க முடிவு செய்திருக்கிறார்கள். இது இந்திய அணிக்கு வெற்றிக்கு அனுகூலமாகிவிடும்.

இந்தியா பாகிஸ்தான்

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் கடைசிவரை விறுவிறுப்பாக இருநதது. ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்று களமிறங்கிய இந்திய அணியினர் துவக்கம் சிறப்பானதாக இருந்தது.

சேவாக் தனக்கு வந்த அனைத்து பந்துகளையும் அடித்து ஆடினார். அவர் அவுட் ஆனவுடன் வேகமாக சென்று கொண்டிருந்த ரன் ரேட் மெதுவாக இறங்கி ஒரு கட்டத்திற்கு ஐந்தை விட குறைந்து விட்டது.

ஒரு பக்கம் சீராக விக்கெட்டுகளையும் இழந்து கொண்டிருந்தார்கள். 42வது ஓவரில் பொறப்பற்ற முறையில் டோனி அவுட் ஆனார். 205 ரன்னிற்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 250 கூட எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. நல்ல வேளை ரைனா நின்று ஆடியதால் ஸ்கோர் 260 அடிக்க முடிந்தது.

பாகிஸ்தான் அணியினரின் மோசமான பீல்டிங் அவர்கள் வெற்றி வாயப்பை பறித்தது. சச்சினின் விக்கெட்டை வீழ்த்த கிடைத்த 4 கேட்சுகளையும் தவற விட்டதற்காக அவர்களுக்கு தோல்வி என்னும் தண்டனை கிடைத்தது.

அது என்னமோ தெரியவில்லை இந்தியாவிற்கு எதிராக புதிததாக பந்து வீச வருபவர்கள் நன்றாக போலிங் செய்கிறார்கள். பார்மில் இல்லாத பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கிறார்கள். அப்படியும் இந்தியா வெற்றி பெற்று விடுவது டோனியின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அதிர்ஷ்டம் இறுதி போட்டி வரைக்கும் தொடரும் போலிருக்கிறது. இலங்கை அணியின் முக்கியமான பந்து வீச்சாளர் முரளிதரனும், மேத்யூசும் விளையாட பட்சத்தில் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.

Monday, March 28, 2011

உலகக்கோப்பை 2011 – மூன்றாவது மற்றும் நான்காவது காலிறுதி

நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா

மூன்றாவது காலிறுதியில் யாரும் எதிர்பாராத திருப்பம், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்று அனைவரும் உறுதியாக இருந்த நிலையில் நியூசிலாந்து சுலபமாக தென் ஆப்பிரிக்காவை ஓவர் டேக் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்கா தான் விளையாடிய ஆறு லீக் ஆட்டங்களில் ஐந்தில் வெற்றிப் பெற்று ‘பிபிரிவில் முதல் இடத்தில் இடம்பெற்றிருந்தது. கண்டிப்பாக இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

நியூசிலாந்து அணியோ ‘ஏபிரிவில் நான்காவது இடத்தில் இடம் பெற்றிருந்தது. உலக கோப்பைக்கு முன்பு பங்களாதேஷ், மற்றும் இந்தியவிடம் மோசமாக தோற்றிருந்தது. உலக கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறுவதில் அந்த அணிக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.

ஆனால் காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொண்டதன் மூலம் அரை இறுதியில் இலங்கையுடனான ஆட்டம் பலத்த எதிர்பார்ப்பை உருவக்கியுள்ளது. இப்போது அந்த அணி ஆபத்தான அணியாக திகழ்கிறது..

அந்த அணியின் போலிங் பயிற்சியாளர் டொனால்டின் சிறந்த பயிற்சி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு பக்க பலமாக உள்ளது.

நியூசிலாந்து பல தோல்விகளை சந்தித்திருந்தாலும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மேற்கொண்ட சிறப்பான ஒரு முடிவு அணி கேப்டன் பொறுப்பில் இருந்து வெட்டோரியை மாற்றாமல் இருந்ததுதான். இதன் மூலம் அணியில் பிளவு ஏற்படாமல் தடுக்க முடிந்தது.

இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பொறுப்பில் இருந்த கெயிலை மாற்றாமல் இருந்திருநதால் ஒரு வேளை அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறியிருக்க கூடும்.

இல்ங்கை இங்கிலாந்து

இங்கிலாந்து அணி தான் விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் பரபரப்பான முடிவை அளித்திருந்தது. இந்த நிலையில் இலங்கையுடனான காலிறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவரையும் இங்கிலாந்து வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஏமாற்றி விட்டார்கள்.

இங்கிலாந்து அணியின் முன்னனி வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறிவிட்டதால் அந்த அணியின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சை அவர்களால் சமாளிக்கவே முடியவில்லை. மிகவும் கஷ்ட்டப்பட்டு 50 ஓவ்ர்களை தாக்குப் பிடித்ததே பெறும் பாடாகி விட்டது.

அதை விட பரிதாபம் இலங்கை அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் சரணடைந்ததுதான். .

அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ள இலங்கை அணியை பொறுத்த வரையில் அந்த அணி சுழற் பந்து வீச்சை பெரிதும் நம்பி உள்ளது. பேட்டிங்கில் முதல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் அந்த அணியின் நிலைமை மோசமாகி விடும்.

நாளை நடக்க இருக்கும் நியூசிலாந்து இலங்கையுடனான ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணிக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Friday, March 25, 2011

உலகக்கோப்பை 2011 – முதல் மற்றும் இரண்டாவது காலிறுதி

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்

ஏதோ காலிறுதிக்கு தெரியாம வந்துட்டோம் அதனால ஆடுறோம் என்பது போல இருந்தது வெஸ்ட் இண்டீஸின் ஆட்டம். பங்களாதேஷே பரவாயில்லை போலிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் படு சொதப்பலாக ஆடியது.

அது என்னமோ தெரியலை அப்ரிடிக்கு எல்லா மாட்சுலயும் விக்கெட் விழுகிறது. மெயின் போலர்ஸை விட அதிகமான விக்கெட் எடுக்கிறார். பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் போலிங்கில் அதை சரிபடுத்தி விடுகிறார்.

டெஸ்ட் மேட்ச் மாதிரி ஆடின சந்தர்பால் மட்டுமே சுமாராக ஆடினார். மற்ற யாரும் சோபிக்கவில்லை. சரி போலிங்காவது சுமாராக போடுவார்கள் என்று எதிர்பார்த்தது தவறாக போனது.

அது என்னமோ தெரியலை இந்தியாவிடம் மட்டும் மாய்ந்து மாய்ந்து போலிங் போட்ட ராம்பால் பாகிஸ்தானுக்கு எதிராக பொட்டி பாம்பாக அடங்கி விட்டார்.

சாமிக்கு கேப்டனாக இதுதான் கடைசி தொடராக இருகக வேண்டும். இனிமேல் இதுபோன்ற கேப்டனை தேர்வு செய்தால் அந்த அணி வருங்காலத்தில் டெஸ்ட் மேட்ச் விளையாட கூட தகுதி இல்லாமல் போய் விடுவார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் சூடுபறக்க மோதி கொண்டன. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்வதாக அறிவித்த பாண்டிங் கூடவே 250 ரன்கள் எடுத்தாலே போதும் என்று கூறியது அவருடைய தவறான கணிப்பாக அமைந்து விட்டது.

பிட்ச் மற்றும் இந்திய பௌலிங்கையும் மதிப்பீடு செய்து 250 ரன்கள் என்று ஓரளவு சரியாக கூறிவிட்ட அவர் இந்திய அணியின் பலமான பேட்டிங் வரிசையை மறந்து விட்டார் போலிருக்கிறது.

300 ரன்கள் எடுத்திருந்தால் கூட ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருககுமா என்பது சந்தேகம்தான். இத்தனைக்கும் ஷேவாக் நின்று ஆடவில்லை, ஆடியிருந்தால் சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம்.

மேலும் ஸ்பின்னிற்கு சாதகமான பிட்சில் ஆஸ்திரேலிய அணியில் வார்னே போன்ற ஸ்பின்னர்கள் இல்லாததும் பெரிய இழப்பு.

கடந்த ஒரு வருடமாக ஃபார்மில் இல்லாத யுவராஜ் சிங் தட்டு தடுமாறிதான் உலக கோப்பையில் இடம் பெற்றார். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.. அணியின் முக்கியமான ஆல் ரவுண்டராக பிரகாசிக்க தொடங்கி விட்டார்.

இந்தியா பைனலுக்கு தகுதி பெற்றால் கண்டிப்பாக யுவராஜ் சிங்தான் தொடர் நாயகனாக அறிவிக்கப்படுவார். அப்ரிடி பௌலிங் மட்டுமே சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் யுவராஜ் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது..

கடந்த 7 ஆட்டங்களில் இதுவரை நான்கு மேன் ஆப் தி மாட்ச் பெற்றுள்ளார் யுவராஜ். டோனி பேட்டிங் ஆர்டர் எதையும் மாற்றி சொதப்பாமல் இருநததும், அஸ்வினை அணியில் சேர்தததும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Monday, March 21, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 15

இங்கிலாந்து மேற்கு இந்திய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டதால், பங்களாதேஷுக்கு, தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் கண்டிப்பாக ஜெயித்தால்தான் காலிறுதி என்ற நிலைமையில் மோதியது.

ஆனால் பங்களாதேஷ் அணி கென்யா, நெதர்லாந்து எப்படி ஆடுமோ அதே மாதிரி ஆடி தோற்றுப் போனது அந்த நாட்டு ரசிகர்களை கண்டிப்பாக பாதித்திருக்கும்.

இப்படி பங்களாதேஷ் அணி கேவலமாக தோற்றுப் போனது இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்திய அணிகளுக்கு காலிறுதியில் நுழைவதற்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் காணாமல் போனது.

இந்தியா மேற்கு இந்திய தீவு

ஒரு வழியாக லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதியில் யார், யார் மோதப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் இந்திய அணியிலும் மேற்கு இந்திய அணியிலும் சிறிய மாற்றங்களை செய்து களமிறங்கினார்கள்.

ஆட்டம் தொடங்கும்போது இந்திய அணிக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால மேற்கு இந்திய அணியின் ராம்பால் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வேட்டு வைத்தார். 300 அடிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி வழக்கம் போல் பவர்ப்ளேயில் சொதப்பலாக ஆடி 268 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது அசிங்கமாக இருந்தது.

அதன்பிறகு மேற்கு இந்திய அணி தொடக்கம் நன்றாக இருந்தாலும் பிறகு சொதப்பலாக ஆடினார்கள். இங்கிலாந்துடனான ஆட்டத்திலாவது பரவாயில்லை இந்த ஆட்டத்தில் அது கூட இல்லை வேகமாக ஆல் அவுட் ஆகி பெவிலியன் போய் சோகமாக உட்கார்ந்து கொண்டார்கள்.

ஒரு வழியாக நேற்றைய ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அஸ்வின் சிறப்பாக பந்து வீசி அடுத்த ஆட்டத்திற்கு தன்னை தகுதிபடுத்திக் கொண்டார்.

காலிறுதியில் மோதப் போகும் அணிகள் மற்றும் யாருக்கு வெற்றி வாயப்பு :

1. பாகிஸ்தான் மேற்கு இந்திய தீவு தற்போதைய நிலையில் பாகிஸ்தான் வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளது.

2. இந்தியா ஆஸ்திரேலியா இரண்டும் சமபலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன. இந்திய மண்ணில் ஆடுவதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

3. தென் ஆப்பிரிக்கா நியுசிலாந்து ஆட்ட முடிவு செர்ல்லவே தேவையில்லை, தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற முழு வாய்ப்பு இருக்கிறது.

4. இலங்கை இங்கிலாந்து இதுவும் சமபலம் பொறுந்திய அணிகள் மோதும் ஆட்டமாக அமையும். இலங்கை வெற்றிப் பெற வாய்ப்பு இருக்கிறது.

மேற்கண்டபடி அணிகள் வெற்றிப் பெற்றால் முதல் அரை இறுதியில் தென் ஆபபிரிக்காவும் இலங்கையும் மோதும்.

இரண்டாவது அரை இறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்

இறுதி போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோத வாய்ப்பு உள்ளது.

இந்தியா கோப்பையை வெற்றிப் பெற வேண்டும் என்று மனது துடிக்கிறது. ஆனால் புத்தி அதை தடுக்கிறது.


Saturday, March 19, 2011

கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பாலு மகேந்திரா


வழக்கமாக அலுவலகம் விட்டவுடன் பள்ளி மாணவனைப் போல் வீட்டுக்கு ஓடிவிடும் நான், நேற்று கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பாலு மகேந்திரா அவர்களால் ஓட முடியாமல் ஈர்க்கப்பட்டேன்.

எங்கள் அலுவலக தோழரும், பிரபல எழுத்தாளரும், பதிவருமான பாலு சத்யாவின் சீரிய முயற்சியால் பாலு மகேந்திரா கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தார்.

படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று அறபுதமாக விளக்கினார். எழுத்தை விட அந்த எழுத்தை படமாக்குவது எவ்வளவு கடினம் என்பதை எளிமையான உதாரணங்கள் மூலம் சிறப்பாக விளக்கினார்.

’இவ்வளவு கடினமான பணியை மேற்கொள்ளும் எங்களை நல்ல சினிமா ஏன் கொடுப்பதில்லை என்று கேட்காதீர்கள். உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள்’ என்றார். அப்படி கேட்பவர்கள் வந்து களத்தில் இறங்கி கதை தயார் செய்து படமாக்கிப் பாருங்கள் தெரியும் என்றார்.

பாலு மகேந்திராவின் அனைத்து படங்களும் சிறப்பானவை. அவரை நல்ல சினிமா கொடுக்க வில்லை என்று யாரும் கேட்க முடியாது.

ஆனால் மோசமான படங்கள் கொடுப்பவர்களைப் பார்த்து ஏன் நல்ல சினிமா கொடுங்கள் என்று கேட்கக் கூடாது? என்பதுதான் என் கேள்வி.

சினிமா துறையை விரும்பி தேர்ந்தெடுத்து வருபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அப்படி அந்தத் துறையில் கால் பதித்தவர்களைப் பார்த்து கேட்காமல் மற்றத் துறையில் இருப்பவர்களையா கேட்க முடியும்?

வெள்ளிக்கிழமை தோறும் புதிய படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் 100க்கு 10 கூட ஓடுவதில்லை. இப்படி இருக்கும்போது நல்ல படம் வரவில்லையே என்ற மக்களின் ஏக்கம்தான் இவ்வாறு கேட்க வைக்கிறது.

ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஆதங்கமும் எதிர்பார்ப்பும்தான், தலைவர்களையும், கலைஞர்களையும் உருவாக்குகிறது என்று படித்திருக்கிறேன். நல்ல படம் வரவில்லையே என்ற பெரும்பான்மையான மக்களின் ஆதங்கம் நான்கு பாலு மகேந்திராக்களை உருவாக்கினால் நல்லதுதானே.