Thursday, March 31, 2011

உலகக்கோப்பை 2011 – முதல் மற்றும் இரண்டாவது அரைஇறுதி

நியூசிலாந்து இலங்கை

முதல் அரை இறுதியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி சிறப்பான துவக்கம் இல்லாவிட்டாலும் 43 ஓவர் வரை நன்றாகவே விளையாடினார்கள். பின்னர் என்னவாயிற்றோ தெரியவில்லை மலிங்கா காலை பார்த்து வீசிய பந்துக்கெல்லாம் அவுட் ஆனார்கள்.

ட்ரிபிள் எம் என்று சொல்லப்படும் முரளிதரன், மலிங்கா, மெண்டீஸ் மூவரின் பந்து வீச்சும் அபாரமாக உள்ளது.

கால் இறுதியில் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய நியூசிலாந்து முக்கியமான இந்த அரை இறுதியில் அதை செய்ய தவறி விட்டார்கள்.

முதல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் போதும் இலங்கை அணி திணறி விடும். அது இந்த ஆட்டத்தில் வெளிப்படையாக தெரிந்தது. இன்னும் 50 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகு இந்த முறையும் இலங்கை அணி தடுமாறி போனது.

இந்த இடத்தில் இரண்டு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் சமரவீராவும், மேத்யூசும் சேர்ந்து நிலைமையை சமாளித்து தங்கள் அணி வெற்றி பெற உதவினர். முக்கியமான இந்த கட்டத்தில் நியூசிலாந்து விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இறுந்திருக்கும்.

இந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம் இல்ங்கை அணி இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த அணியில் தற்போது முரளிதரன், மேத்யூஸ் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் இறுதி போட்டியில் இடம்பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி அவர்கள் விளையாட முடியாத பட்சத்தில் சமிந்தா வாஸ் மற்றும் ரந்தீவ் இருவரையும் சேர்க்க முடிவு செய்திருக்கிறார்கள். இது இந்திய அணிக்கு வெற்றிக்கு அனுகூலமாகிவிடும்.

இந்தியா பாகிஸ்தான்

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் கடைசிவரை விறுவிறுப்பாக இருநதது. ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்று களமிறங்கிய இந்திய அணியினர் துவக்கம் சிறப்பானதாக இருந்தது.

சேவாக் தனக்கு வந்த அனைத்து பந்துகளையும் அடித்து ஆடினார். அவர் அவுட் ஆனவுடன் வேகமாக சென்று கொண்டிருந்த ரன் ரேட் மெதுவாக இறங்கி ஒரு கட்டத்திற்கு ஐந்தை விட குறைந்து விட்டது.

ஒரு பக்கம் சீராக விக்கெட்டுகளையும் இழந்து கொண்டிருந்தார்கள். 42வது ஓவரில் பொறப்பற்ற முறையில் டோனி அவுட் ஆனார். 205 ரன்னிற்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 250 கூட எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. நல்ல வேளை ரைனா நின்று ஆடியதால் ஸ்கோர் 260 அடிக்க முடிந்தது.

பாகிஸ்தான் அணியினரின் மோசமான பீல்டிங் அவர்கள் வெற்றி வாயப்பை பறித்தது. சச்சினின் விக்கெட்டை வீழ்த்த கிடைத்த 4 கேட்சுகளையும் தவற விட்டதற்காக அவர்களுக்கு தோல்வி என்னும் தண்டனை கிடைத்தது.

அது என்னமோ தெரியவில்லை இந்தியாவிற்கு எதிராக புதிததாக பந்து வீச வருபவர்கள் நன்றாக போலிங் செய்கிறார்கள். பார்மில் இல்லாத பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கிறார்கள். அப்படியும் இந்தியா வெற்றி பெற்று விடுவது டோனியின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அதிர்ஷ்டம் இறுதி போட்டி வரைக்கும் தொடரும் போலிருக்கிறது. இலங்கை அணியின் முக்கியமான பந்து வீச்சாளர் முரளிதரனும், மேத்யூசும் விளையாட பட்சத்தில் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.

Monday, March 28, 2011

உலகக்கோப்பை 2011 – மூன்றாவது மற்றும் நான்காவது காலிறுதி

நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா

மூன்றாவது காலிறுதியில் யாரும் எதிர்பாராத திருப்பம், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்று அனைவரும் உறுதியாக இருந்த நிலையில் நியூசிலாந்து சுலபமாக தென் ஆப்பிரிக்காவை ஓவர் டேக் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்கா தான் விளையாடிய ஆறு லீக் ஆட்டங்களில் ஐந்தில் வெற்றிப் பெற்று ‘பிபிரிவில் முதல் இடத்தில் இடம்பெற்றிருந்தது. கண்டிப்பாக இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

நியூசிலாந்து அணியோ ‘ஏபிரிவில் நான்காவது இடத்தில் இடம் பெற்றிருந்தது. உலக கோப்பைக்கு முன்பு பங்களாதேஷ், மற்றும் இந்தியவிடம் மோசமாக தோற்றிருந்தது. உலக கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறுவதில் அந்த அணிக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.

ஆனால் காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொண்டதன் மூலம் அரை இறுதியில் இலங்கையுடனான ஆட்டம் பலத்த எதிர்பார்ப்பை உருவக்கியுள்ளது. இப்போது அந்த அணி ஆபத்தான அணியாக திகழ்கிறது..

அந்த அணியின் போலிங் பயிற்சியாளர் டொனால்டின் சிறந்த பயிற்சி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு பக்க பலமாக உள்ளது.

நியூசிலாந்து பல தோல்விகளை சந்தித்திருந்தாலும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மேற்கொண்ட சிறப்பான ஒரு முடிவு அணி கேப்டன் பொறுப்பில் இருந்து வெட்டோரியை மாற்றாமல் இருந்ததுதான். இதன் மூலம் அணியில் பிளவு ஏற்படாமல் தடுக்க முடிந்தது.

இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பொறுப்பில் இருந்த கெயிலை மாற்றாமல் இருந்திருநதால் ஒரு வேளை அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறியிருக்க கூடும்.

இல்ங்கை இங்கிலாந்து

இங்கிலாந்து அணி தான் விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் பரபரப்பான முடிவை அளித்திருந்தது. இந்த நிலையில் இலங்கையுடனான காலிறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவரையும் இங்கிலாந்து வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஏமாற்றி விட்டார்கள்.

இங்கிலாந்து அணியின் முன்னனி வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறிவிட்டதால் அந்த அணியின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சை அவர்களால் சமாளிக்கவே முடியவில்லை. மிகவும் கஷ்ட்டப்பட்டு 50 ஓவ்ர்களை தாக்குப் பிடித்ததே பெறும் பாடாகி விட்டது.

அதை விட பரிதாபம் இலங்கை அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் சரணடைந்ததுதான். .

அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ள இலங்கை அணியை பொறுத்த வரையில் அந்த அணி சுழற் பந்து வீச்சை பெரிதும் நம்பி உள்ளது. பேட்டிங்கில் முதல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் அந்த அணியின் நிலைமை மோசமாகி விடும்.

நாளை நடக்க இருக்கும் நியூசிலாந்து இலங்கையுடனான ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணிக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Friday, March 25, 2011

உலகக்கோப்பை 2011 – முதல் மற்றும் இரண்டாவது காலிறுதி

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்

ஏதோ காலிறுதிக்கு தெரியாம வந்துட்டோம் அதனால ஆடுறோம் என்பது போல இருந்தது வெஸ்ட் இண்டீஸின் ஆட்டம். பங்களாதேஷே பரவாயில்லை போலிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் படு சொதப்பலாக ஆடியது.

அது என்னமோ தெரியலை அப்ரிடிக்கு எல்லா மாட்சுலயும் விக்கெட் விழுகிறது. மெயின் போலர்ஸை விட அதிகமான விக்கெட் எடுக்கிறார். பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் போலிங்கில் அதை சரிபடுத்தி விடுகிறார்.

டெஸ்ட் மேட்ச் மாதிரி ஆடின சந்தர்பால் மட்டுமே சுமாராக ஆடினார். மற்ற யாரும் சோபிக்கவில்லை. சரி போலிங்காவது சுமாராக போடுவார்கள் என்று எதிர்பார்த்தது தவறாக போனது.

அது என்னமோ தெரியலை இந்தியாவிடம் மட்டும் மாய்ந்து மாய்ந்து போலிங் போட்ட ராம்பால் பாகிஸ்தானுக்கு எதிராக பொட்டி பாம்பாக அடங்கி விட்டார்.

சாமிக்கு கேப்டனாக இதுதான் கடைசி தொடராக இருகக வேண்டும். இனிமேல் இதுபோன்ற கேப்டனை தேர்வு செய்தால் அந்த அணி வருங்காலத்தில் டெஸ்ட் மேட்ச் விளையாட கூட தகுதி இல்லாமல் போய் விடுவார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் சூடுபறக்க மோதி கொண்டன. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்வதாக அறிவித்த பாண்டிங் கூடவே 250 ரன்கள் எடுத்தாலே போதும் என்று கூறியது அவருடைய தவறான கணிப்பாக அமைந்து விட்டது.

பிட்ச் மற்றும் இந்திய பௌலிங்கையும் மதிப்பீடு செய்து 250 ரன்கள் என்று ஓரளவு சரியாக கூறிவிட்ட அவர் இந்திய அணியின் பலமான பேட்டிங் வரிசையை மறந்து விட்டார் போலிருக்கிறது.

300 ரன்கள் எடுத்திருந்தால் கூட ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருககுமா என்பது சந்தேகம்தான். இத்தனைக்கும் ஷேவாக் நின்று ஆடவில்லை, ஆடியிருந்தால் சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம்.

மேலும் ஸ்பின்னிற்கு சாதகமான பிட்சில் ஆஸ்திரேலிய அணியில் வார்னே போன்ற ஸ்பின்னர்கள் இல்லாததும் பெரிய இழப்பு.

கடந்த ஒரு வருடமாக ஃபார்மில் இல்லாத யுவராஜ் சிங் தட்டு தடுமாறிதான் உலக கோப்பையில் இடம் பெற்றார். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.. அணியின் முக்கியமான ஆல் ரவுண்டராக பிரகாசிக்க தொடங்கி விட்டார்.

இந்தியா பைனலுக்கு தகுதி பெற்றால் கண்டிப்பாக யுவராஜ் சிங்தான் தொடர் நாயகனாக அறிவிக்கப்படுவார். அப்ரிடி பௌலிங் மட்டுமே சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் யுவராஜ் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது..

கடந்த 7 ஆட்டங்களில் இதுவரை நான்கு மேன் ஆப் தி மாட்ச் பெற்றுள்ளார் யுவராஜ். டோனி பேட்டிங் ஆர்டர் எதையும் மாற்றி சொதப்பாமல் இருநததும், அஸ்வினை அணியில் சேர்தததும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Monday, March 21, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 15

இங்கிலாந்து மேற்கு இந்திய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டதால், பங்களாதேஷுக்கு, தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் கண்டிப்பாக ஜெயித்தால்தான் காலிறுதி என்ற நிலைமையில் மோதியது.

ஆனால் பங்களாதேஷ் அணி கென்யா, நெதர்லாந்து எப்படி ஆடுமோ அதே மாதிரி ஆடி தோற்றுப் போனது அந்த நாட்டு ரசிகர்களை கண்டிப்பாக பாதித்திருக்கும்.

இப்படி பங்களாதேஷ் அணி கேவலமாக தோற்றுப் போனது இந்தியா, இங்கிலாந்து, மேற்கு இந்திய அணிகளுக்கு காலிறுதியில் நுழைவதற்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் காணாமல் போனது.

இந்தியா மேற்கு இந்திய தீவு

ஒரு வழியாக லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதியில் யார், யார் மோதப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் இந்திய அணியிலும் மேற்கு இந்திய அணியிலும் சிறிய மாற்றங்களை செய்து களமிறங்கினார்கள்.

ஆட்டம் தொடங்கும்போது இந்திய அணிக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால மேற்கு இந்திய அணியின் ராம்பால் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வேட்டு வைத்தார். 300 அடிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி வழக்கம் போல் பவர்ப்ளேயில் சொதப்பலாக ஆடி 268 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது அசிங்கமாக இருந்தது.

அதன்பிறகு மேற்கு இந்திய அணி தொடக்கம் நன்றாக இருந்தாலும் பிறகு சொதப்பலாக ஆடினார்கள். இங்கிலாந்துடனான ஆட்டத்திலாவது பரவாயில்லை இந்த ஆட்டத்தில் அது கூட இல்லை வேகமாக ஆல் அவுட் ஆகி பெவிலியன் போய் சோகமாக உட்கார்ந்து கொண்டார்கள்.

ஒரு வழியாக நேற்றைய ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அஸ்வின் சிறப்பாக பந்து வீசி அடுத்த ஆட்டத்திற்கு தன்னை தகுதிபடுத்திக் கொண்டார்.

காலிறுதியில் மோதப் போகும் அணிகள் மற்றும் யாருக்கு வெற்றி வாயப்பு :

1. பாகிஸ்தான் மேற்கு இந்திய தீவு தற்போதைய நிலையில் பாகிஸ்தான் வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளது.

2. இந்தியா ஆஸ்திரேலியா இரண்டும் சமபலம் வாய்ந்த அணிகளாக இருக்கின்றன. இந்திய மண்ணில் ஆடுவதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

3. தென் ஆப்பிரிக்கா நியுசிலாந்து ஆட்ட முடிவு செர்ல்லவே தேவையில்லை, தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற முழு வாய்ப்பு இருக்கிறது.

4. இலங்கை இங்கிலாந்து இதுவும் சமபலம் பொறுந்திய அணிகள் மோதும் ஆட்டமாக அமையும். இலங்கை வெற்றிப் பெற வாய்ப்பு இருக்கிறது.

மேற்கண்டபடி அணிகள் வெற்றிப் பெற்றால் முதல் அரை இறுதியில் தென் ஆபபிரிக்காவும் இலங்கையும் மோதும்.

இரண்டாவது அரை இறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்

இறுதி போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோத வாய்ப்பு உள்ளது.

இந்தியா கோப்பையை வெற்றிப் பெற வேண்டும் என்று மனது துடிக்கிறது. ஆனால் புத்தி அதை தடுக்கிறது.


Saturday, March 19, 2011

கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பாலு மகேந்திரா


வழக்கமாக அலுவலகம் விட்டவுடன் பள்ளி மாணவனைப் போல் வீட்டுக்கு ஓடிவிடும் நான், நேற்று கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பாலு மகேந்திரா அவர்களால் ஓட முடியாமல் ஈர்க்கப்பட்டேன்.

எங்கள் அலுவலக தோழரும், பிரபல எழுத்தாளரும், பதிவருமான பாலு சத்யாவின் சீரிய முயற்சியால் பாலு மகேந்திரா கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தார்.

படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று அறபுதமாக விளக்கினார். எழுத்தை விட அந்த எழுத்தை படமாக்குவது எவ்வளவு கடினம் என்பதை எளிமையான உதாரணங்கள் மூலம் சிறப்பாக விளக்கினார்.

’இவ்வளவு கடினமான பணியை மேற்கொள்ளும் எங்களை நல்ல சினிமா ஏன் கொடுப்பதில்லை என்று கேட்காதீர்கள். உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள்’ என்றார். அப்படி கேட்பவர்கள் வந்து களத்தில் இறங்கி கதை தயார் செய்து படமாக்கிப் பாருங்கள் தெரியும் என்றார்.

பாலு மகேந்திராவின் அனைத்து படங்களும் சிறப்பானவை. அவரை நல்ல சினிமா கொடுக்க வில்லை என்று யாரும் கேட்க முடியாது.

ஆனால் மோசமான படங்கள் கொடுப்பவர்களைப் பார்த்து ஏன் நல்ல சினிமா கொடுங்கள் என்று கேட்கக் கூடாது? என்பதுதான் என் கேள்வி.

சினிமா துறையை விரும்பி தேர்ந்தெடுத்து வருபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அப்படி அந்தத் துறையில் கால் பதித்தவர்களைப் பார்த்து கேட்காமல் மற்றத் துறையில் இருப்பவர்களையா கேட்க முடியும்?

வெள்ளிக்கிழமை தோறும் புதிய படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் 100க்கு 10 கூட ஓடுவதில்லை. இப்படி இருக்கும்போது நல்ல படம் வரவில்லையே என்ற மக்களின் ஏக்கம்தான் இவ்வாறு கேட்க வைக்கிறது.

ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஆதங்கமும் எதிர்பார்ப்பும்தான், தலைவர்களையும், கலைஞர்களையும் உருவாக்குகிறது என்று படித்திருக்கிறேன். நல்ல படம் வரவில்லையே என்ற பெரும்பான்மையான மக்களின் ஆதங்கம் நான்கு பாலு மகேந்திராக்களை உருவாக்கினால் நல்லதுதானே.

Friday, March 18, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 14

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ்

நேற்று நடைபெற்ற ஆட்டத்தை யார் பார்த்தார்களோ இல்லையோ கண்டிப்பாக ஒட்டுமொத்த பங்களாதேஷ் நாட்டினரும் பார்த்திருப்பார்கள்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ்க்கும் ஆட்டத்திற்கும் பங்களாதேஷுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது

நேற்றைய ஆட்டத்தில இங்கிலாந்து தோற்க வேண்டும் என்று பங்களாதேஷ் ரசிகர்கள் பிராத்தனை செய்திருப்பார்கள். இங்கிலாந்து தோற்றால் பங்களாதேஷ் சுலபமாக கால்இறுதிக்கு சுலபமாக முன்னேற வாய்ப்பு இருந்தது.. ஆனால் அவர்கள் பிராத்தனை வீணாக போனது.

அதனால் இப்போது அவர்கள் தங்கள் கடைசி ஆட்டத்தில் வலிமையான தென் ஆப்பிரிக்கா அணியுடன மோத வேண்டும். தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து வெற்றிப் பெறுவது என்பது சவாலான ஒன்று.

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஏன்தான் இப்படி சொதப்புகிறார்களோ தெரியவில்லை. சொதப்பலுக்கு முக்கியமான காரணம் சரியான தலைமை இல்லை என்பதே.

நேற்றைய ஆட்டத்தில் அவர்கள் சுலபமாக வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். அப்படி வெற்றி பெற்றிருந்தால் ஆட்ட நாயகனாக வெஸ்ட் அண்டீஸின் ஆல் ரவுண்டர் ரசல் அறிவிக்கப்பட்ருந்திருப்பார்.

ஆல்ரவுண்டர் ரசல்


ஆனால் அப்படி எதுவும் நிகழ இங்கிலாந்து ஸ்பின்னர்கள் இடம் கொடுக்கவில்லை. டரேட்வெல் மற்றும் ஸ்வான் இருவரின் சுனாமி பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் கடைசி நான்கு ரன்களில் நான்கு விக்கெட்டுகள் இழந்தது பரிதாபமாக இருநதது.

‘பி‘ பிரிவில் மட்டும் ஒவ்வொரு ஆட்டம் முடிந்தவுடன் வரும் செய்திகளை படித்தால் தலை சுற்றிப் போகும். அவன் ஜெயித்து இவன் தோற்க வேண்டும். இவ்ன ஜெயித்து அவன் தோற்க வேண்டும் அப்போது இவன் அடுத்ததுக்கு போக, இவன் வெளியே போக என்று ஏக அடிதடிகள் நடக்கின்றன.

இன்றைய தினத் தந்தியை படிக்காதவர்களுக்கு கீழே உள்ள செய்தியைப் படித்தால் புரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று.

‘பி‘ பிரிவில் தென் ஆபபிரிக்கா மட்டுமே கால்இறுதியை உறுதி செய்திருக்கிறது. இந்தியாவின் கால்இறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி என்றாலும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை. வெற்றி பெற்றாலும் கால்இறுதி வாய்ப்பு உறுதியாகுமா? என்பதை அறிய இன்னும் 2 ஆட்டங்களின் முடிவுக்காக இங்கிலாந்து காத்திருக்க வேண்டும். அதாவது நாளை நடக்கும் தென் ஆப்பிரிக்கா – வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் தென் ஆபபிரிக்கா வென்றால் இங்கிலாந்து கால்இறுதிக்கு தகுதி பெற்று விடும். மாறாக வங்காளதேசம் வென்றால் அந்த அணி கால்இறுதிக்கு தகுதி பெறும். அதன் பிறகு இங்கிலாந்துக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (20-ந்தேதி) இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்து அமையும்.
5-வது ஆட்டத்தில் ஆடி 2-வது தோல்வியை சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி கால்இறுதிக்கு முன்னேற கடைசி லீக்கில் இந்தியாவை வென்றாக வேண்டும்.

Thursday, March 17, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 13

கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற 6 ஆட்டங்களில் ஒரு ஆட்டம் கூட உருப்படியாக இல்லை.

இதுவரை மொத்தம் 35 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. பரபரப்பான ஆட்டம் என்று 10 ஆடடங்களை கூட குறிப்பிட முடியாது. இதுவரை நடந்துள்ள முடிந்துள்ள ஆட்டங்களின் முடிவுகள் உலகக் கோப்பையின் மீது ரசிகர்களுக்கு வெறுமையையே உணர்த்துகிறது.

இன்று நடகக இருக்கும் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் இங்கிலாந்திற்கு வாழ்வா – சாவா போட்டி. வெற்றி பெற்றால் காலிறுதி இல்லையென்றால் லண்டன் ரிடர்ன்.

இங்கிலாந்து வெற்றி பெற்றால்தான் அடுத்து வரும் ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும். இல்லையென்றால் அது வெறும் சடங்காகிவிடும்.

பங்களாதேஷ் காலிறுதிக்கு வருவதை விட இங்கிலாந்து வருவதே சாலச் சிறந்தது. பங்களாதேஷ் எப்போதாவதுதான் வெற்றி பெறும். ஆனால் இங்கிலாந்து அப்படியில்லை தன்னுடைய லீக் மேட்சில் தென் ஆபபிரிக்காவை மணணை கவ்வ வைத்தது நினைவிருக்கலாம். மேலும் ஏ பிரிவில் இருந்து காலிறுதிக்கு வரும் அணிக்கு இங்கிலாந்து மட்டுமே சவாலாக நிற்க முடியும்.

Monday, March 14, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 12

கடந்த 10-ம் தேதி நடந்த இலங்கை – ஜிம்பாப்வே ஆட்டம் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி முடிந்து போனது. கடந்த காலங்களில் ஜிம்பாப்வே அணி சூபபராக இல்லாவிட்டாலும் சுமாராகவாவது விளையாடி கொண்டிருந்தது.

பிளவர் சகோதர்கள், கேம்பல், பேட்டிங்கிலும் ஸட்ரீக், ஒலாங்கா, போலிங்கிலும் எதிரணியினர் எப்போதாவது நிலைகுலைந்து போவார்கள். ஆனால் தற்போது கனடா, கென்யா நாடுகளை தவிர மற்ற யாருடனும் போராடாமல் தோற்றுப் போகிறார்க்ள்.

இவர்களுக்கு பின் வந்த பங்களாதேஷ் நல்ல முன்னேற்றமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்த சில அரசியல் நிகழ்வுகளால் அந்த அணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. இப்படியே தொடர்ந்தால் இவர்கள் அடுத்த உலகக் கோப்பையில் இம்பெறுவது சந்தேகம்தான்.

11-ம் தேதி நடந்த இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து அணியிடம் வெற்றிப் பெற்றிருந்த அயர்லாந்திற்கு இதில் வெற்றிப் பெற்றால் காலிறுக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தியாவிடம் தோற்றதை போல வெஸ்ட் இண்டீஸ் அணியிடமும் தோற்றப் போனது பரிதாபத்துக்குரியது.

இங்கிலாந்து - பங்களாதேஷ்

அது என்னமோ தெரியவில்லை, இங்கிலாந்து இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களும் பரபரப்பாகவே இருந்தது.. இங்கிலாந்து – இந்தியா ஆட்டம் டை (Tie) ஆனது. அயர்லாந்துடனான பரபரப்பான ஆட்டத்தில் தோற்று போனது. வலிமையான தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது, பங்காளதேஷூடம் நடந்த ஆட்டமும் அதே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

முதலில் ஆடிய இங்கிலாந்தை சிறப்பாக பந்து வீசி 225 ரன்களுக்கு சுருட்டிய பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் சுமாராக விளையாடினாலும் நடுவில் சொதப்பியது.

இலக்கை எட்ட 57 ரன்கள் என்ற நிலையில் 8 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் அந்த அணியில் அஷ்ரப்புல்லிற்கு மாற்றாக களம் இறங்கிய முகமதுல்லாவும், இஸ்லாமும் சிறப்பாக ஆடி தங்கள் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற அந்த நிமிடங்கள் மிகவும் பரபரப்புக்குரியது.

வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணியினர் முகத்தில் ஒரே சந்தோஷம். ரசிகர்களை கேட்கவா வேண்டும். அவர்கள் ஆடிய ஆட்டத்தில் இரண்டு அணி வீரர்களும் ஹோட்டலுக்கு அதிகாலையில்தான் செல்ல முடிந்தது. அவ்வளவு டிராபிக் உண்டு பண்ணி விட்டார்கள்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா


இந்தியா – தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டம் எதிர்பார்த்ததைப் போலவே விறுவிறுப்பான ஆட்டமாக அமைந்தது. ஆட்டத்தின் முடிவு இந்திய ரசிகர்களை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது.

இந்திய அணியின் அபாரமான துவக்கத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார்கள். ஷேவாக்கும் – சச்சினும சேர்ந்து தென் ஆப்பிரிக்க மண்ணில் தோற்றதற்கு பழி தீர்ப்பது போல் ஆடினார்ர்கள்.

பவர்ப்ளே வரை நன்றாக ஆடிக் கொண்டிருந்தவர்கள் ஏதோ சொல்லி வைத்து ஆடுவது (மேட்ச் பிக்சிங்) மாதிரி வேக வேகமாக அவுட் ஆனார்கள்.

சரி 296 ரன் நல்ல ஸ்கோர் தானே வெற்றிப் பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்த்தது எல்லாம் பொய்யாகி போனது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் நெஹ்ரா வீசிய நான்கே பந்துகளில் ஆட்டம் முடிவுக்கு வந்தது ரசிகர்களை எரிச்சளுக்குள்ளாக்கியது.

என்னடா ஆடுகிறார்கள் இவர்கள் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை கோட்டை விட்டார்களே என்று ரசிகர்கள் அங்கலாய்ந்து போனார்கள்.

இப்படி தோற்பதும் ஒருவகையில் நல்லதுதான். ஜெயித்துக கொண்டே இருந்தால் அடுத்த ஆட்டத்தில் ஒழுங்காக ஆட மாட்டார்கள். (இது இந்திய அணிக்கு மட்டும்).

ஒவ்வொரு ஆட்ட முடிவிலும் டோனி பேசும்போது நாங்கள் இந்த துறையில் இன்னும் முன்னேற வேண்டும், அந்த துறையில் இன்னும் முன்னேற வேண்டும் என்று கூறுவார். அதேபோல் இந்த ஆட்டம் முடிந்தவுடன் ஒரு பொன் மொழி உதிர்த்துள்ளார். ரசிகர்களுக்காக ஆடக்கூடாது, நாட்டுக்காக ஆட வேண்டும் என்று.

பேச்செல்லாம் வக்கணையாக பேசுகிறார். ஆட்டத்தில்தான கோட்டை விட்டு விடுகிறார்.

Thursday, March 10, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 11

இந்தியா – நெதர்லாந்து

இதுவரை நடைபெற்ற 25 ஆட்டங்களில் இந்தியா – இங்கிலாந்து, அயர்லாந்து – இங்கிலாந்து ஆட்டம் தவிர அனைத்தும் பரபரப்பு இன்றி முடிந்தது ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

நேற்று நடைபெற்ற ஆட்டமும் எந்தவித விறுவிறுப்பும் இன்றி முடிந்தது போரடித்தது.

அது ஏன் இந்தியா மட்டும் சிறிய நாடுகளுடன் மோசமாக விளையாடுகிறது என்று தெரியவில்லை. சுலபமாக ஜெயிக்க வேண்டிய ஆட்டங்களில் எல்லாம் கஷ்ட்டப்பட்டு ஜெயிப்பது ரசிகர்களை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. போலிங்தான் வீக்காக உள்ளது என்று பார்த்தால், கடந்து இரண்டு ஆட்டங்களில் பேட்டிங்கும் மோசம் முதல் நான்கு, ஐந்து விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்து விடுகிறார்கள். பிறகு ஆமை போல மெதுவாக ஆடி வெற்றி பெறுவது ஆர்வமுடன் ஆட்டத்தை பார்ப்பவர்களை ஏமாற்றி விடுகிறது.

நேறறைய வெற்றியின் மூலம் காலிறுதித்கு முன்னேறி விட்ட இந்தியாவிற்கு, வரும் இரண்டு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது. இந்த ஆட்டங்களிலாவது இந்தியா விறுவிறுப்புடன் விளையாடுமா? என்று ரசிகர்கள ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Wednesday, March 9, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 10

கனடா – கென்யா

கடந்த திங்கள் மோதிக் கொண்ட சிறியவர்களான கனடாவும் கென்யாவும் மோதும் ஆட்டம் ஆக்ரோஷமாக இருக்கும என்று யாராவது எதிர்பர்த்திருந்தால் அது மிகப்பெரிய தவறு.

நாங்க பெரிய அணிகளுக்கு எப்போதாவது அதிர்ச்சி கொடுப்போமே தவிர எங்களுக்குள்ள சாதாரணமாதான் ஆடிக்குவோம் என்பதுபோல இருந்தது அவர்களுடைய ஆட்டம்.

முதலில் ஆடிய கென்யா அணியினர் ஏனோ கனடாவை பார்த்து பயந்து போயிருந்தார்கள் போலிருக்கிறத- ஏற்கனவே பாகிஸ்தானை சற்று ஆட்டம் காண வைத்திருந்த கனடா அணியினரை பகைத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்தவர்கள் போல இருந்தது அவர்கள் ஆட்டம்.

200 ரன் எல்லாம் எடுத்தா கண்ணு பட்டு விடும் அதனால் 2 ரன் குறைவாக 198 ரன்னிற்கு, சரியாக 50வது ஓவர் முடிவில் ஆல் அவுட் ஆனதுதான் அவர்கள் ஸ்பெஷல்.

பின்னர் ஆடிய கென்யா அணியின் கேப்டன் திறமையாக! விளையாடி (வேற வழி இவங்ககூட ஆடலைன்னா அசிங்கமாயிடுமே) வெற்றிக்கு வழி வகுத்தார்.

கனடாவுக்கு ஒரு வெற்றியாவது கிடைத்தது, கென்யாதான் பாவம் வெற்றியே இல்லாம ஊருக்குப் போக வேண்டியிருக்கும் போலிருக்கு,

நியூசிலாந்து - பாகிஸ்தான்

தொடர்ந்து மூன்று வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதல் இடத்தில் இருநத பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டத்தில் பாவம் நியூஸிலாந்திடம் அடி வாங்கியது கண் கொள்ளா காட்சி போங்கள்.

முதல் 45 ஓவரைப் பொருத்தவரைக்கும் பந்து வீசி கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு பெரிதாக ஒன்றும் பாதகம் ஏற்பட்டுவிடவில்லை. கடைசி 5 ஓவரில் நியூசிலாந்து வீரர் டெய்லர் அடித்தார் பாருங்கள் அப்படி அடித்தார். சிக்ஸர் மழையாக பொழிந்தார். அவருடன் சேர்ந்து மெக்குல்லமும், ஓரமும் பாகிஸ்தானை திணற, திணற அடித்தார்கள்.

எப்போ 50 ஓவர முடியும் ஓடிப்போயிடலாம் என்கிற அளவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் நொந்து போயிருந்தார்கள்.

சரி பதிலுக்கு பதில் அடிப்பார்கள் என்று பார்த்தால் ஏற்கனவே அடி வாங்கின பாதிப்பு அவர்களை விடவில்லை போலிருக்கிறது. வந்த வேகத்தில் அவுட் ஆகி சென்றார்கள். 303 இலக்கு என்றால் 192க்கே ஆல் அவுட் ஆகி 110 ரன் வித்தயாசத்தில் தோற்றது மிகவும் பரிதாபம்..

ரசாக்கும், உமர் குல்லும் சுமாராக ஆடினார்கள். சரி கிட்டேயாவது சென்று தோற்பார்கள் என்று எதிர்பார்த்தற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ம்ஹும் முடியவே முடியாது. தலையே (அப்ரிடி) போய் விட்டது நாங்கள் ஏன் ஆட வேண்டும் என்பது மாதிரி ரசாக்கும் பந்தை தூக்கி அடித்து அழகாக கேட்ச் கொடுத்து விட்டு போய் விட்டார். அடுத்த மூன்றாவது பந்திலேயே அக்தரும் அவுட் ஆக ஆட்டம் முடிந்து விட்டது. இன்னும் 8 ஓவர் வேறு இருந்தது. ஆடத்தான் யாரும் இல்லை.

தொடர்ந்த 3 வெற்றி பெற்றதினால் அப்ரிடிக்கு தெரியாமல் வளர்ந்திருந்த கொஞ்சூண்டு அகங்காரமும் நசுக்கப்பட்டிருக்கும்.

நியூசிலாந்து பந்து வீச்சு பயிற்சியாளர் டொனால்டு, வேகப் பந்து வீச்சாளர்களை நன்றாக டிரில் எடுத்திருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் என்னவோ நியூசிலாந்து வீரர்களின் வேகப்பந்து வீச்சு படு பயங்கரமாக இருந்தது. முதலில் ஆஸ்திரேலியா உடனான ஆட்டத்தில் தோற்றிருந்த நியூசிலாந்து இப்போது தேறி வருகிறது.

பெண்களுக்கான திட்டங்கள் அவர்களை சென்று சேருகிறதா?

நேற்று மகளிர் தினத்தை ஒட்டி பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, சலுகைகள் என்று நிறைய அறிவிப்புகள் வெளியிட்டார்கள்.

இவ்வளவ அறிவிப்புகள் செய்யும் அமைச்சர்கள், அநத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது அவை பெண்களுக்கு சரியாக சென்று சேருகிறதா என்று கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.

உதாரணத்திற்கு மம்தா பானர்ஜி பதவி ஏற்றபோது அறிவித்திருந்த பெண்களுக்கான தனி ரயில் பற்றி பார்ப்போம். மம்தாவிற்கு முன்னரே பெண்களுக்கான ரயில் பெட்டி இயங்கி வந்தது. அது பெருமளவு காலியாகவே இருக்கும். பின்னர் அதிலேயே பாதி ரயில் ஆண்களுக்கும், பாதி பெண்களுக்கும் என்று பிரித்து விடடார்கள்.

மம்தா வந்த பிறகு ஒரு முழு ரயில் பெட்டியும் பெண்களுக்கென ஒதுக்கினார். இப்போது பழையபடி அது பாதி காலியாக சென்று கொண்டிருக்கிறது.

பெண்களுக்கான தனி ரயில் பெட்டியை விடுவதை விட அனைத்து ரயில்களிலும் பெண்களுக்கு தறபோது ஒதுக்கப்பட்டிருக்கும் பெட்டிகளுடன் கூடுதலாக ஒரு ரயில் பெட்டி சேர்த்தால் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும.

தற்போது பெண்களுக்கென்று இயங்கும் தனி ரயிலினால் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அலுவலக நேரத்தில் எப்படியும் 20 நிமிடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதை தவிர்க்க பாதி காலியாக இயங்கி கொண்டிருக்கும் பெண்கள் ரயிலில் ஆண்களுக்கு பாதி பெட்டிகளாவது பயணம் செய்ய அனுமதிக்கலாம்.

திட்டத்தை அறிவிப்பதோடு சரி அது பெண்களுக்கும் உபயோகப்படுவதில்லை ஆண்களுக்கும் அதனால் தொந்தரவே ஏற்படுகிறது.

மம்தா பானர்ஜி தறபோது ரயிலில் பயணம் செய்யும் கல்லூரி பெண்களுக்கு இலவச பாஸ் அறிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு பெண்கள் கீழ்மட்டத்தில் உள்ளது போல தோற்றத்தை உண்டாக்கி விடுகிறது.

இதுபோன்று பெண்களுக்கென்று வெளியிடப்படும் திட்டங்களில் அனைத்திலும் ஓட்டை உள்ளது. திட்டங்களை அறிவிக்கும் முன் அந்த திட்டம் ஒழுங்காக சென்று சேருகிறதா என்று கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். அல்லது அறிவித்த திட்டங்கள் பெண்களுக்கு பயன்படுகின்றனவா என்று அதிகாரிகளை கலந்து ஆலோசனையாவது செய்கிறார்களா என்று தெரியவில்லை பெரும்பாலான அமைச்சர்கள் வேகவேகமாக யாரோ எழுதிக்கொடுத்த திட்டங்களை படித்து விட்டு, கான்டீனுக்கு டீ சாப்பிட சென்று விடுகிறார்கள். இது மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

Monday, March 7, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி – 9

இங்கிலாந்து – தென் ஆப்ரிக்கா

நேற்று சென்னையில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்தும் – தென் ஆப்ரிக்காவும் மோதிக் கொண்டன. ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்ரிக்கா அணி சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்தை 171 ரன்களுக்குள் சுருட்டி விட்டது.

எங்கே பங்களாதேஷ் போல 58 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகிவிடுவார்களோ என்று பயந்த சென்னை ரசிகர்களுக்கு அபயம் அளிப்பது போல டிராட்டும், போப்ராவும் நான்காவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது அந்த அணி சுமாரான ஸ்கோரை எட்ட உதவியது மட்டுமின்றி கடைசியில் அவர்கள் வெற்றி பெறவும் உதவியது.

பின்னர் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் என்ற நல்ல தொடக்கத்தை எடுத்து ஆடிக் கொண்டிருந்த தென் ஆப்ரிக்கா சுலபமாக வெற்றி பெற்று விடும் என்று எண்ணி டி.வியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் (நேரில் பார்த்தவர்களை பற்றி நமக்கென்ன தெரியும்) இந்தியா – அயர்லாந்து ஆட்டத்தை பார்க்க சேனலை மாற்றியிருந்திருப்பார்கள்.

நன்றாக ஆடிக் கொண்டிருந்த தென் ஆப்ரிக்காவிற்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை குழந்தைகளுக்கு வீட்டு ஞாபகம் வருவது போல் தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு பெவிலியன் ஞாபகம் வந்து விட்டதாக தோன்றுகிறது. யார் போட்டாலும் அவுட் ஆகி பெவிலியனில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

மடமடவென்று 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரனக்ள் என்ற மோசமான நிலைக்கு சென்று விட்டனர். விக்கெட் கீப்பர் வேன் விக்கும், ஸ்டெயினும் போனனால் போகிறது என்று 33 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை விவிறுப்பான நிலைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் 4 நான்கு ஓவரில் 12 ரன்கள் மட்டுமே என்ற பரபரப்பான நிலைக்கு கொண்டு சென்றவர்கள் கொஞ்சம் நேரம் நின்று ஆடக்கூடாது. மாட்டவே மாட்டோம், இதுவே அதிகம் என்பது போல் வேன் விக் அவுட்டாகி விட மற்ற விரர்களும் வந்த உடன் அவுட்ஆகி ஆட்டம் க்ளோஸ் ஆனது.

சென்ற முறை அயர்லாந்துடன் தோற்ற அதிர்ச்சியில் இங்கிலந்து கேப்டன் ஸ்ட்ராசுக்கு பேச்சே வரவில்லை. இந்தமுறை வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் பேச்சே வந்திருக்காது என்று நினைக்கிறேன். எப்படியோ இங்கிலாந்து காலிறுதிக்கான போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியா - அயர்லாந்து

அயர்லாந்து டீமை சாதாரணமாக எடுத்துக்கக்கூடாது என்று ஆளாளுக்கு இந்தியாவிற்கு அட்வைஸ் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்தியா கேப்டன் டோனியும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே அயர்லாநதுடன் எப்படி ஆடப்போகிறோம் என்று பேட்டி எல்லாம் கொடுக்கத் தொடஙகி விட்டார்.

கண்டிப்பா டாஸ் ஜெயிச்சா இந்தியா பந்து வீசும் என்றெல்லாம் சொல்லிவிட்டார். அதேபோல டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதோ இந்த ஓவரில் ஒரு விக்கெட, அடுத்த ஓவர்ல ஒரு விக்கெட் என்று ஜாகிர்கான் முதல் இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரம் எடுத்து விட்டார்.

3வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த அயர்லாந்து அதன் பின்னர் பந்து வீச வந்த யுவராஜ் சிங்கை பார்த்த உடனே ஒரு முடிவுக்கு வந்து விட்டதை போல தோன்றியது. நீங்க போடவே வேண்டாம் நாங்களாகவே அவுட் ஆகி போயிடுவோம் இருந்தாலும் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது பாருங்க, அதனால நீங்க போடற மாதிரி போடுங்க நாங்களே அவுட் ஆயிடுவோம் என்று முன்பே பேசிக் கொண்டது போல் யுவுராஜ் பந்து வீச்சில் 5 பேர் அவுட்டானார்கள். ஏன்னப்பா நீங்களே விக்கெட் எடுக்கறீங்க நானும் ஒரு விக்கெட் எடுத்துக்கறேன் என்று முனாப் பட்டேல் கடைசி ஒரு விக்கெட்டை எடுத்துக் கொண்டார்.

கடைசியில் 207 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்ட அயர்லாந்து இதுவே இந்தியாவிற்கு அதிகம் என்று சொல்வது போல இருந்தது அவர்களுடைய பந்து வீச்சு.

ஆட்டம் துவங்கியவுடன் ஷேவாக்கிற்கு பெவிலியனில் காபி சாப்பிடும் ஞாபகம் வந்து விட்டது போலிருக்கிறது. உடனே அவுட் ஆகி விட்டார். பின்னாடியே கம்பீரும் நானும் வரேன் என்று சென்று விட பாவம் சச்சினும், கோலியும் குருவி சேர்ப்பது மாதிரி ரன்களை சேர்த்தனர்.

சச்சினுக்கு போரடித்து இருக்க வேண்டும். ஸ்டம்பிற்கு நேராக பந்தை காலில் வாங்கிக் கொண்டார். அம்பயர் அவுட் காட்டிவிட சச்சின் நேராக கோலியிடம் சென்று எனக்கு போரடிக்குது ரெவ்யூ (Review) எல்லாம் வேண்டாம் நான் போறேன் என்று கழண்டு கொண்டார்.

பின்னர் வந்த யுவராஜ் சிங்கிற்கு ஒரே டோனி ஞாபகம். கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடப் பிடிக்கவில்லை போலும். பழைய சண்டை ஏதாவது ஞாபகம் வந்திருக்க வேண்டும் ஒரு ரன்னிற்கு ஸ்டார்ட் கொடுத்து பாதி க்ரீஸ் ஓடி வந்து விட்டு திரும்பி சென்று விட்டார் பாவம் கோலி பாதிக்கு மேல் ஓடி வந்து திரும்ப முடியவில்லை ரன் அவுட். ஏன் இப்படி பன்றே என்று கேட்க அதற்கு யுவராஜ் (சீனியர் ப்ளேயராம்) அதுதான் திரும்பி போக சொன்னேன் இல்லே என்று முறைக்க வேறு செய்தார்.

அப்பா டோனி வந்தியா வா நிறைய ஓவர் இருக்கு ரெண்டு பேரும் சேர்ந்து மெதுவா ஆடுவோம்னு யுவராஜூம், டோனியும் 100 பந்திற்கு 67 ரன்கள் சேர்த்தனர். அயர்லாந்து கிட்ட ஜாக்கிரதையா ஆடனும்னு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே ஆடியிருப்பார்கள் போலிருக்கிறது ரெண்டு பேரும் பொறுமையா ஆடினார்கள்.

ரசிகர்களுக்குதான் போரடித்து விட்டது. டோனி அவுட் ஆகி யூசப் பதான் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்ஸ் என்று ஆட்டத்தை முடித்து விட்டார். அடப்பாவிங்களா ஏதோ போலிங் பிச்சுன்னு நினைச்சா இதோ இப்ப வந்த இவன் மட்டும் அதே பிட்சுல இப்படி அடிக்கிறான் நீங்க என்னடா இவ்வளவு நேரம் பண்ணீங்க என்று கேட்க வேண்டும் போலத் தோன்றியது.

மொத்தத்தில் மெதுவாக ஆடினாலும் அயர்லாந்துடன் ஜெயித்தது இந்தியாவிற்கு பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை ஆடிய 3 ஆட்டங்களிலும் அயர்லாந்து சிறப்பாகவே விளையாடியிருக்கிறது. அந்த அணி பங்களாதேஷூடன் தொற்காமல் வெற்றிப் பெற்றிருந்தால் இந்நேரம் காலிறுதிக்கான போட்டியில் முன்னனியில் இருந்திருக்கும். இன்னும் அந்த அணிக்கு வாயப்பு இருக்கிறது. பார்க்கலாம என்ன செய்கிறார்கள் என்று.

தி.மு.க – காங்கிரஸ் விரிசல் யாருக்கு பாதிப்பு?

கடந்த சனிக்கிழமை நடந்த இலங்கை - ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

மேட்ச் எதுவும் இல்லாமல் போரடித்து கொண்டிருந்த நேரத்தில் மேட்சிற்கு மாற்றாக சன் செய்திகளில் ப்ளாஷ் நியூஸ் விறுவிறுப்பாக வந்து கொண்டிருந்தது.

காங்கிரஸ் 63 தொகுதிகள் வேண்டுமென்று நிபந்தனை விதித்ததால் காங்கிரஸ் கூட்டணி முறிந்தது என்று கலைஞர் அறிவிப்பு என்று செய்தி வெந்து கொண்டிருந்தது.

தனக்கு தானே குழிபறித்து கொள்வது, சொந்த செலவில் சூனியம் என்றெல்லாம் சொல்வார்கள் இப்போதைய காங்கிரஸ் நிலைமை அப்படிதான் இருக்கிறது. தனியாக நின்றால் டெபாஸிட் கூட கிடைக்காது என்பதை காங்கிரஸ் மறந்து போய் விட்டது போல் தெரிகிறது.

ஏற்கெனவே விலை வாசி உயர்வு, மின்சார தட்டுப்பாடு, என்று ஏகப்பட்ட சிக்கலில் இருக்கும் தி.மு.க. இந்த முறை வெற்றிப்பெறுவதே சந்தேகம்தான்.

வெங்காய விலை உயர்வுகே ஒருமுறை ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அதிலும் இப்போது அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ள நிலையில் என்னதான் ஒரு ரூபாய் அரிசி, இலவச தொலைக்காட்சி என்று கொடுத்தாலும் நடுத்தர மற்றும், அடித்தட்டு மக்கள் இந்த விலை வாசி உயர்வால் பெரும் பாதிப்புடைந்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

இதில் காங்கிரஸ் உடன் கூட்டணி முறிவு தி.மு.க.வை இன்னும் பாதிக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்தததே. காங்கிரஸ் உடன இருப்பதால் ஒன்றும் தேர்தல் முடிவில் பெரிய மாற்றம் ஒன்றும் தி.மு.கவிற்கு ஏற்பட போவதில்லை. என்ன ஒன்று ஓட்டு வித்தியாசம் குறையக் கூடும் அவ்வளவுதான.

தற்போது காங்கிரஸ் மறு பரிசீலனை செய்யுமாறு தி.மு.க.விற்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது. வேறு வழியில்லை இரண்டு கட்சிகளும் சமரசம் செய்து கொள்வதுதான் இருவருக்குமே நல்லது.

Friday, March 4, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி - 8

நியூசிலாந்து – ஜிம்பாப்வே

இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் மோதின விருவிருப்பாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டம் உப்பு சப்பில்லாமல் முடிந்து போனது.

முதலில் ஆடிய் ஜிம்பாப்வே 162 ரன்கள் சீக்கிரம் ஆல் அவுட் ஆனது. கிடைத்த வெற்றி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நியூசிலாந்து அணி 34வது ஓவரில் இலக்கை எட்டி விட்டது.

கனடா அணியிடம் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஜிம்பாப்வே அணிக்கு இன்னும் கென்யா அணியுடன் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்றபடி அந்த அணி காலிறுதிக்கு நுழையும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது. பெரிய அணிகளுடன் எல்லாம் நாங்கள் போராட நாங்கள் தயாராக இல்லை என்று வரும்போதே முடிவு செய்து விட்டு வருவார்கள் போலிருக்கிறது. ஒரு சிறிய போராட்டம் கூட இல்லாமல் மடிந்து போகிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் – பங்களா தேஷ்

இன்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் – பங்களா தேஷ் ஆட்டம் மூன்றே மணி நேரத்தில் முடிந்து விட்டது. 20/20 ஆட்டத்தை விட வேகமாக முடிந்து விட்டது. (நேரததில் மட்டும்)

ஜிம்பாப்வே அணயே பரவாயில்லை போலிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் உடனான ஆட்டத்தில் பங்களா தேஷ் அணி தங்கள் நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் தங்கள் மானத்தை காறறில் பறக்க விட்டு கொண்டார்கள்.

வெறும் 18.5 ஓவர் மட்டுமே போட்டு 58 ரன்களுக்குள் பங்களாதேஷை சுருட்டி வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி உடனே களம் இறங்கி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 11வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி விட்டது. பங்களாதேஷ் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருபபார்கள். வீரர்கள் எங்கேயாவது ஒளிந்து கொள்வது நல்லது.

இனி அடுத்து வரும் ஆட்டங்களில் இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் தென் ஆப்ரிக்கா என்று மிகவும் கடும் போட்டியை பங்களாதேஷ் அணி சந்திக்க உள்ளது.

மூன்றில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் கூட அநத் அணி காலிறுதிக்குள் நுழைய முடியுமா என்பது சந்தேகமே.

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி - 7

தென் ஆப்ரிக்கா – நெதர்லாந்து

நேற்று நடைபெற்ற தென் ஆப்ரிக்கா – நெதர்லாந்து ஆட்டம் முழுவதும் தென் ஆப்ரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது பலமான குத்துச் சண்டை வீரன் ஒரே அடியில் எதிராளியை நாக் அவுட் செய்தது போல் இருந்தது இந்த ஆட்டம். ஆளாளுக்கு சதம் காண துடிக்கிறார்கள். இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் இத்தனை சதம் அடித்ததில்லை. போக போக நிறைய சதங்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தென் ஆப்ரிக்கா அணி முதல் ரவுண்டிலேயே எதிரணியை சுலபமாக வீழ்த்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சரிக்கு சரி நின்று ஆடக் கூடியவர்கள் இந்திய அணியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இங்கிலாந்து தற்போது அயர்லாந்திடம் தோற்றுப்போய் மோசமான நிலையில் உள்ளது. மற்றபடி பி குரூப்பில் தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக வருவதில் எந்த சந்தேகமுமில்லை.

பாகிஸ்தான் – கனடா


நேற்று வெற்றிப் பெற கிடைத்த அருமையான வாய்ப்பை கனடா அணி வீணாக்கி விட்டது. முதலில் ஆடிய பாகிஸ்தானை 43 ஓவரில் 184 ரன்களில் சுருட்டி ஆச்சரியப்பட வைத்த அவர்கள் பின்னர் பேட்டிங் செய்யும்போது அதெல்லாம் நாங்கள் தெரியாமல் செய்து விட்டோம் என்பது போல் ஆடினார்கள்..

கனடா இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மட்டுமே எதிரணியை 200 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்திருக்கிறார்கள்.

செமத்தியாக அடி வாங்கிக் கொண்டிருந்த அந்த அணிக்கு நேற்று கிடைக்க வேண்டிய வெற்றியை அப்ரிடி தடுத்து விட்டார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. உமல் அக்மலும், மிஸ்பாவும் சேர்ந்து 73 ரன் எடுத்தனர். பின்னர் வந்த அப்ரிடி 20 ரன்கள் மட்டுமே அடித்தார். 43 ஓவர் மட்டுமே ஆடிய பாகிஸ்தான் அணி 184 ரன்களுக்குள் சுருண்டது.

பின்னர் ஆடிய கனடா அணி 33 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 103 என்ற சுமாரான நிலையில் இருந்தது. பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை அப்ரிடி பந்து வீசினால் நாஙகள் கண்டிப்பாக அவுட் ஆகி விடுவோம் என்று சபதம் செய்தது போல அவுட்டாகி சென்றார்கள்.

ரயில் என்ஜின் தடம் மாறினால் எப்படி பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து வரிசையாக கவிழ்ந்து விடுமோ அப்படி வரிசையாக அவுட் ஆகி சென்றார்கள்.

அடுத்த 10 ஓவரில் கடைசி 7 விக்கெட்டுகளை 35 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனார்கள்.

இநத் உலக கோப்பையில் நேற்றைய ஆட்டத்தை கோட்டை விட்ட கனடா அணிக்கு கென்யா அணிக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கிடைத்த வாயப்பை வீணாக்கும் அவர்களுக்கு அது கூட கடினமாக இருக்கப் போகிறது.

Thursday, March 3, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி - 6

கற்றுக் குட்டிகள் என்று ஏளனம் செய்யப்பட்ட சிறிய அணிகளில் ஒன்றான அயர்லாந்து நேற்று ஆடிய ஆட்டம் கிரிக்கெட் சரித்திரத்தில் ஒரு மைல் கல்.

பெங்களூர் மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங் செய்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. இதே மைதானத்தில் கடநத் ஞாயிற்று கிழமை இந்தியா அடித்த மிகப் பெரிய ஸ்கோரை இங்கிலாந்து சேஸ் செய்து டை செய்ததை மறந்திருக்க முடியாது.

நேற்று இங்கிலாந்து அடித்த பெரிய இலக்கான 327 ரன்களை அயர்லர்ந்து அணி கண்டிப்பாக அடிக்காது என்றே பெரும்பாலான ரசிகர்கள் கருதினார்கள். அதற்கேற்றாற்போலவே அயர்லாந்து அணி முதல் 5 விக்கெட்டுகள் 111 ரன்களுக்கு இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆட்டத்தை டி.வி-யில் பார்ததுக் கொண்டிருந்த பெரும்பாலான ரசிகர்கள் இனிமேல் அயர்லாந்து வெற்றி பெறாது என்று எண்ணி வேறு வேலை பார்க்க சென்று விட்டனர்..

ஒரு மணி நேரம் கழித்து ஸ்கோர் பார்க்க சேனலை மாற்றிய போதுதான் தெரிந்தது, அயர்லாந்து அபாயகரமான அணி என்று, ஆறாவதாக களம் இறங்கிய அந்த அணியின் கெவின் ஒபிரையின் ஆட்டம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. முதல் 50 ரன்களை 30 பந்துகளில் எடுத்த அவர் அடுத்த 50 ரன்களை 20 பந்துகளில் எடுத்து புதிய சாதனை படைத்தார். இதுவரை யாரும் உலகக் கோப்பையில் இந்த வேகத்தில் சதம் அடித்தது கிடையாது.

வெற்றி பெறாது என்று நினைத்த அயர்லாந்து அணி பவர்ப்ளேயில் 62 ரன்களை சேர்த்தது திருபபு முனையாக அமைந்தது. மறறும் 6வது விக்கெட்டுக்கு க்யூசக்குடன் சேர்ந்து 162 ரன்களை சேர்த்தது முக்கியமான ஒன்று. கெவின் ஒபிரையின் அடித்த 113 ரன்களில், 88 ரன்கள் பவுண்டரிகளும், சிக்ஸராக அடிக்கப்பட்டவை. (13 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) அவருக்கு உறுதுணையாக க்யூசக்கும், மூனியும் சிறப்பாக ஆடி அயர்லாந்தை வெற்றி பெற செய்தார்கள்.

அயர்லாந்து அணியிடம் தோற்றுப்போன இங்கிலாந்து அணி ஆடிப் போய் இருக்கிறது. அவர்களுடைய பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு இனி வரும் ஆட்டங்கள் சவால் நிறைந்ததாக இருக்கும்.

அடுத்து அயர்லாந்து அணி வரும் ஞாயிரன்று இந்தியாவை எதிர் கொளள் உள்ளது. அயர்லாந்தை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக கொள்ளக் கூடாது. அந்த அணி பார்ட் டைமாக கிரிக்கெட் ஆடி வருகிறார்கள். அவர்கள் மட்டும் முழு நேரக் கிரிக்கெட் ஆடினால் கண்டிப்பாக சிறந்த அணியாக திகழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Wednesday, March 2, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி - 5

கடந்த உலகக்கோப்பைகளில் சில ஆட்டங்களில் சிறிய அணிகள் பெரிய அணிகளை வெற்றிப்பெற்று விட்டன. அதில் இருந்து சிறிய அணிகளை கண்டால் பெரிய அணிகளுக்கு பயங்கர கோபம். அது தற்போது நடந்து கொண்டிருக்கிற உலகக்கோப்பைகளில் பிரதிபளிக்கிறது.

செத்த பாம்பை அடிப்பதுப்போல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரிய அணி முதலில் ஆடினால் 300 ரன்களுக்கு குறைந்து அடிப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அதேபோல் முதலில் ஆடும் சிறிய அணிகளை ஹாட்ரிக் எல்லாம் எடுத்து பெரும்பாலும் 150 ரன்களுக்குள் சுருட்டி வீசி விடுகிறார்கள்.

நேற்று முன்தினம் ஜிம்பாப்வே - கனடா இடையேயான ஆட்டம் நடைப்பெற்றது. ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு இரண்டு போட்டிகளில் வெற்றி வாயப்பு பிரகாசமாக உள்ளது. அதில் ஒன்று கனடாவுடனான ஆட்டம். எதிர்பார்த்தது போல் ஜிம்பாப்வே அணி கனடாவை 175 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஆஸ்திரேலியாவுடன் தன்னுடைய முதல் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோல்வியுற்றது. தற்போது கனடாவுடனான 2வது ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணிக்கு ஆறுதலை அளித்திருக்கும். ஏ பிரிவில் தறபோது ஜிம்பாப்வே 5வது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு நுழைவதற்கு அந்த அணி கடினமான போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

மேற்கு இந்திய தீவு – நெதர்லாந்து

மேற்கு இந்திய தீவு – நெதர்லாந்து இடையேயான ஆட்டம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை மேற்கு இந்திய தீவு அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செய்து 215 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை துரத்தி துரத்தி அடித்தது. ரோச் எடுத்த ஹாட்ரிக் தவிர எழுதுவதற்கு ஒன்றும் இல்லை.

இலங்கை – கென்யா

நேற்று நடைபெற்ற இலங்கை கென்யா அணியை புரட்டி புரட்டி எடுத்தது. இந்த வாரம் ஹாட்ரிக் வாரம் போல் இருக்கிறது. மலிங்கா சென்ற உலகக்கோப்பையில் ஹாட்ரிக் எடுத்திருந்தார். இந்த முறையும் அதை தொடரந்திருக்கிறார். நல்ல வேளை இலங்கை முதலில் பேட் செய்யவில்லை ஆடியிருந்தால் கென்யாவை திணற திணற அடித்திருப்பார்கள். அதில் இருந்து தப்பித்ததே பெரிய விஷயம்தான்.

இப்படி சிறிய அணிகளை புரட்டி எடுக்கும் ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவு, நியூசிலாந்து அணிகள் ஏன் பெரிய அணிகளுடனான ஆட்டங்களில் சரிக்கு சமமாக நின்று போராட கூட முயலுவதில்லை. வெற்றி இலக்கை போராடி தோற்றால் கூட பரவாயில்லை. கொஞ்சம் கூட ஆக்ரோஷம் இல்லாமல் ஆடுவது ரசிகர்களை போரடிக்க செய்து விடுகிறது.

Tuesday, March 1, 2011

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு – புத்தக விமர்சனம்

உலகக்கோப்பையைப் பற்றி ஆசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார்.

1975 உலகக்கோப்பை தொடங்கியது முதல் 2011 உலகக்கோப்பை முன்னோட்டம் வரை புள்ளிவிவரங்களை கூட நகைச்சுவை நடையில் எழுதியிருப்பதுதான் சிறப்பம்சம்.

படிக்கும்போது நிறைய இடங்களில் குபீர் என்று சிரிப்பு வந்து விடுகிறது. ரயிலில் பயணம் செய்யும்போது பாதியும் வீட்டில் பாதியும் படித்தேன். வீட்டிலாவது பராவாயில்லை சிரித்துக் கொண்டே படிக்கலாம் சங்கடம் எதுவும் இல்லை. ஆனால் பயணம் செய்யும்போது சக பயணிகளின் எதிரில் சிரிப்பை அடக்கிக்கொண்டு படிப்பது சங்கடமாக இருந்தது.

1975 முதல் உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நடந்த ஒரு தினப் போட்டியை டெஸ்ட் மேட்ச் போன்று கவாஸ்கர் ஆடியதை விவரிக்கும் இடம் சூப்பர்

1975 உலக கோப்பை பைனலில் மேற்கு இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற 17 ரன்கள் என்ற நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த தாம்ஸன் அடித்த பந்து நேராக கேட்ச் ஆக மேற்கு இந்தியா வெற்றி என்று நினைத்து ஸ்டேடியத்தில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மைதானத்திற்கு உற்சாகமாக ஓடிவருவதையும், அப்போது நடுவர் கையை நீட்டி நோ பால் காட்டிக் கொண்டிருந்ததையும், கேட்ச் பிடித்தவர் ஸ்டம்பை நோக்கி அடித்த பந்து ஓவர் த்ரோ ஆக ப்ளேயர்கள் இருவரும் 17 ரன்களை எடுக்க ஓடியதையும் அவர் நகைச்சவையுடன் விவரிப்பதை படிக்கும்போது உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

ஜோக் புத்தகம் படிக்கும்போது கூட இந்தளவுக்கு நான் சிரித்ததாக நினைவில்லை, ஆனால் இந்த புத்தகம் முழுவதும் நக்கல், நையாண்டியுடன் ஒவ்வொரு அணியையும் அவர் நகைச்சுவை ரசனையுடன் விமர்சனம் செய்து எழுதிய விதம் ரசிக்கும்படியாக இருக்கிறது.

புத்தகம் பற்றிய விவரம் அறிய அல்லது வாங்க இந்த தளத்திற்கு செல்லவும்
https://www.nhm.in/shop/978-81-8493-638-4.html