Monday, February 28, 2011

உலகக் கோப்பை - தொடர்ச்சி - 4

10 வது ஆட்டம்

ஒரு வழியாக உலகக் கோப்பையில் விறுவிறுப்பான ஆரம்பம் தொடங்கி விட்டது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய இலங்கை-பாகிஸ்தான் ஆட்டம் சமபலம் பொருந்தியதாக இருந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் நல்ல தொடக்கம் கொடுக்கவில்லை என்றாலும் பின்னர் வந்த நடுக்கள ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினார்கள். மிஸ்பா சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முரளிதரன் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். இலங்கை அணியில் இந்த ஆட்டத்தில் மலிங்கா இல்லாதது அவர்களின் பௌலிங்கை பாதித்தது.

277 என்ற ஸ்கோரை இலக்காக ஆடிய இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்கு 76 எடுத்தாலும், பின்னர் 20 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கட்டுகளை இழந்து பரிதாபமாக நிலையை அடைந்தது. பின்னர் சங்ககாரவும் - சில்வாவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சங்ககாரா ஆட்டம் இழந்ததும் ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. இருந்தாலும் கடைசியில் வந்த மேத்யூசும், குலசேகராவும் வேகமாக அடித்து ஆடி ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார்கள். கடைசி ஓவர் வரை போராடிய இலங்கை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று போனது. பாகிஸ்தான கேப்டன் அப்ரிடி சிறப்பாக பௌலிங் செய்தது அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தந்தது.

உலக கோப்பை என்றவுடன் பாகிஸ்தான் வீரர்களுக்கு எங்கிருந்ததுதான் சக்தி வருகிறதோ தெரியவில்லை. 1992 ம் உலக கோப்பை அரை இறுதிக்கே அந்த அணி தட்டுத் தடுமாறிதான் இடம் பெற்றது. அந்த அணி உலகக் கோப்பை வெற்றி பெரும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இம்ரான் கான் அதை சாதித்துக் காட்டினார். இப்போது நிலைமை அப்படி இல்லை அந்த அணி சுலபமாக கால் இறுதிக்கு இடம் பெற்று விடும். காலிறுதியில் பாகிஸ்தானை எதிர் கொள்ளவிருக்கும் அணி கடும் சவலாலை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது நிச்சயம்.

உலகக் கோப்பை - 11 வது ஆட்டம்

இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் விறுவிறுப்பில் இலங்கை - பாகிஸ்தான் ஆட்டத்தை மிகவும் பின்தள்ளி விட்டது.

சென்ற ஆட்டத்தில் சீக்கிரம் ரன் அவுட் ஆன சச்சின் சென்ற ஆட்டத்திற்கும் சேர்த்து இந்த ஆட்டத்தில் வெளுத்து கட்டினார். துவக்கத்தில் சிறிது மெதுவாக ஆட ஆரம்பித்து பிறகு யார் பந்து வீசினாலும் அடித்து துவைத்தார். சச்சினை அவுட் ஆக்க ஸ்ட்ராஸ் பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி போட வைத்தும் சச்சின் சதம் அடிப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

கம்பீர் அவுட் ஆனவுடன் கோலி வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் யுவராஜ் களமிறங்கினார். சரி சச்சின் அவுட் ஆனவுடன் வருவார் என்று பார்த்தால் அப்பொழுது தோனி வந்திறங்கினார். இதுபோன்று பலமுறை தோனி நடந்து கொண்டிருக்கிறார். நன்றாக பார்மில் இருக்கும் ஆட்டக்காரரை பினனுக்கு தள்ளி விட்டு அவரோ யுவராஜோ களம் இறங்கி விடுவார்கள். அதுவும் சுலபமாக ஆடக்கூடிய பேட்டிங் பிச்சுகளில் இவ்வாறு நடந்து கொள்வார்கள். சரி அப்படி முன்கூட்டியே இறங்கி அடிப்பார்கள் என்று பார்த்தால் அதுவும் எப்பொழுதாவதுதான் அடிப்பார்கள். பெரும்பாலும் அவுட் ஆகிவிடுவார்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டது ரெய்னாவும், கோளியும் தான். நேறறு அந்த எப்பொழுதாவதில் ஒரு நாளாக அமைந்தது இருவரும் சேர்ந்து 69 ரன்கள் எடுத்தார்கள். பிறகு வேகமாக ரன் எடுக்கிறேன் பேர்வழி என்று அவுட்டானார்கள். நன்றாக செட்டான இருவரில் ஒருவராவது கடைசி வரை நின்றிருந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை அப்படி நின்றிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். 360 ரன்கள் எதிர்பார்த்த நிலையில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பெறிய இலக்கை தவறவிட காரணமாகிவிட்டார்கள்.

இங்கிலாந்து பௌலிங்கில் பிரஸ்னன் சிறப்பாக பந்து வீசினார். அதுவும் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை மிகப் பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் தடுத்து விட்டார்.

338 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எல்லாம் இங்கிலாந்து வீரர்கள் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொணடிருந்த இந்திய ரசிகர்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டார் ஸ்ட்ராஸ். அவருடன் பெல்லும் சேர்ந்து கொண்டு இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி (பெல்) அடித்துக் கொணடிருந்தார்.

பெங்களூர் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. யார் போட்டாலும் இங்கிலாந்து வீரர்கள் அடித்தார்கள். முக்கியமாக ஸ்ட்ராஸ் ஆடிய ஆட்டம் கிரகாம் கூச்சை நினைவுப்படுத்தியது. அவர் இப்படித்தான் ஸ்வீப் செய்தே நிறைய ரன்களை சேர்த்து விடுவார். 43வது ஓவர் வரை ஆட்டம் இங்கிலாந்தின் பக்கமே இருந்தது.

ஸ்ட்ராஸ் பவர்ப்ளே எடுத்த நேரம் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஆரம்பித்தார்கள். ஜாஹிர் கான் வீசிய பவர்ப்ளேயின் முதல் ஓவரில் ஸ்ட்ராசும், பெல்லும் அவுட் ஆக ஆட்டம் சூடு பிடித்தது.

ஆட்டம் சூடு பிடித்த நேரத்தில் எங்கள் ஏரியாவில் (பம்மல்) கரண்ட் கட் ஆனது. ஆட்டத்தை காண முடியாத கோபம் எல்லாம் ஆற்காடு வீராசாமியின் பேரில் சென்றது. மின்சார வாரியம் செயல்படும் விதம் தமிழக மக்களுக்கு திருப்தியில்லாத நிலையில் உலகக் கோப்பை நடக்கும் இந்த நேரத்தில் தொடர்ந்து இப்படி நடந்தால் கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்சி கவிழுவதற்கு காரணமாகிவிடுவார்கள் என்பதை இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

பிறகு என்ன டிரான்சிஸ்டரை தேடி எடுத்து மேட்ச் கமெண்ட்ரி கேட்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஓவரிலும் விறுவிறுப்பு கூடிகொண்டே சென்றது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி என்ற நிலையில், பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் குழுமியிருந்த அத்தனை பேறும் எழுந்து நின்று கொண்டதை என் மனக் கண்ணால்தான் காண முடிந்தது. ஏன் என்றால் கடைசி பந்தின் போது நானும் எழுந்து நின்று கொண்டிருந்தேன். முனாப் பட்டேல் வீசிய அந்த பந்தை ஸ்வானால் ஒரு ரன்னை மட்டுமே எடுத்ததை கேட்கும்போது பயங்கர த்ரில்லிங் ஆக இருந்தது.

இந்தியா வெற்றி பெறாமல் ஆட்டம் டை ஆனது ஏமாற்றம் அளித்தாலும் எப்படியோ டை ஆவது செய்தார்களே என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

Saturday, February 26, 2011

உலக கோப்பை – 2011 தொடர்ச்சி - 3

உலக கோப்பை – 7வது ஆட்டம்

உலக கோப்பை தொடங்கி முதல் நான்கு நாட்களாக நடைபெற்ற 3 ஆட்டங்களும் எந்தவித விருவிருப்பும் இன்றி முடிவுகள் அமைந்துவிட்டன. எல்லா ஆட்டங்களும் ஒரு பக்க ஆட்டமாக அமைந்தது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. கடந்த வியாழக்கிழமை இரண்டு பெரிய அணிகளான தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்திய தீவு இடையே நடைபெற்ற ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. முதலில் ஆடிய மேற்கு இந்திய அணி தொடக்கமே ஏமாற்றமளித்தது.

முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான கேயலை மட்டுமே நம்பி மேற்கு இந்திய அணி ஆடுவதாக தெரிகிறது. அப்படி ஒருவரை நம்பி ஒரு அணி இருப்பது அந்த அணிக்கு நல்லதல்ல.

தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் முதல் ஓவரில் சுழற் பந்தை இறக்கி முக்கிய ஆட்டக்காரர் கேயலை ஆட்டம் இழக்க செய்தார். இது மேற்கு இந்திய அணியை நிலைகுலைய செய்து விட்டது. பின்பு வந்த வீரர்கள் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினாலும். கடைசி 5 விக்கெட்டுகள் வெரும் 24 நான்கு ரன்களுக்கும் ஆட்டம் இழந்து ஆல் அவுட் ஆனது. மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய அணி 222 ரன்களுக்குள் சுருண்டது.

தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் 3 ஸ்பின்னர்கள் இடம் பெற்றிருந்தனர். புதிய ஸ்பின்னர் தாஹிர் தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை கலங்கடிக்க செய்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் முன்னனி ஆட்டக்காரர்களை வீழ்த்தி விட, வேகப் பந்து வீச்சாளர் ஸ்டெயின் தன் பங்குக்கு கடைசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் 5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் சதம் அடித்து அணியை சுலபமாக வெற்றி பெறச் செய்தார்.

ரிச்சர்ட்சுக்கு பிறகு மேற்கு இந்திய அணியில் மிகப்பெரிய கேப்டன் யாரும் இதுவரை உருவாகவில்லை. அணியின் வெற்றிக்கு கேப்டனின் பங்கு மிகவும் அவசியம். அது மேற்கு இந்திய தீவிற்கு இல்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த கவலை இல்லை. கெப்ளர் வெசல்ஸ், குரோனியே, ஸ்மித் என்று திறமை வாய்ந்த கேப்டன்கள் கிடைத்து விடுகிறார்கள்.

இப்பொழுதைய நிலையில் மேற்கு இந்திய தீவு அணி, பங்களாதேஷ், ஐயர்லாந்து மற்றும் நெதர்லாந்து உடனான ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிருதிக்கு தகுதி பெற முடியும். அந்த அணிக்கு மிகப் பெரிய சவாலாக பங்களாதேஷ் அணி உள்ளது. எனவே இனிமேலாவது அவர்கள் நன்றாக ஆடுவார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

உலக கோப்பை - 8வது ஆட்டம்

சமீப காலமாக நியூசிலாந்து அணி ஜிம்பாபே அணியை போன்று ஆடி வருகிறது. சென்ற ஆட்டத்தில் சிறிய அணியான கென்யாவை ஜெயித்ததை தவிர விடாமல் தோற்றுக் கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுடன் ஆடிய நேற்றைய ஆட்டத்திலும் எந்தவித போராட்டமும் இன்றி தோற்று போனது. நியூசிலாந்து நாட்டில் பூகம்பம் ஏற்பட்டது அந்த அணியை மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் எத்தனையோ மோசமான நிகழ்வுகள் இருந்தாலும் அந்த அணி போட்டி என்று வந்து விட்டால் எதிரணியுடன் ஆக்ரோஷமாக மோதுவார்கள். ஆனால் நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அப்படி ஆடுவது இல்லை ஏதோ கடமைக்கு ஆடி கொண்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றதை பெறிய வெற்றியாக கருத முடியாது. உண்மையான வெற்றி அடுத்து வரும் ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாõகிஸ்தானை வெற்றி பெறுவதில் தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவை பொறுத்த வரை வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களுடைய முனைப்பு அபாரமானது. அவர்கள் கடைசி பந்து வரையும் போராட கூடியவர்கள்.

உலக கோப்பை - 9வது ஆட்டம்

சம பலம் பொறுந்திய பங்களாதேஷ் - அயர்லாந்து ஆட்டம் எதிர்பார்ப்புக்குள்ளாக்கியது. முதலில் ஆடிய பங்களாதேஷை 205 ரன்களில் அயர்லாந்து சுருட்டியது ஆச்சரியமளித்தது என்றாலும் பின்னர் அவர்கள் நிலைத்து நின்று ஆட தவறிவிட்டார்கள். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுத்து கொண்டிருந்தார்கள். 45 ஓவரிலேயே ஆல் அவுட் ஆகி விட்டார்கள். கையில் பவர்பிளே இருந்தும் உபயோகமில்லாமல் போய் விட்டது. 50 ஓவர்கள் முழுவதுமாக ஆடியிருந்தால் ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம்.

தொடர்ந்து உப்பு சப்பில்லாத ஆட்டங்களை கண்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. அன்மையில் தினமணி கட்டுறையில் சிறிய அணிகளை உலகப் கோப்பையில் சேர்க்காமல் இருத்நால் நல்லது என்றும். அதற்கு மாற்றாக உலக கோப்பை அல்லாத தொடர்களில் பெரிய அணிகளுடன் விளையாட அனுமதிப்பது சிறப்பாக இருக்கும் என்றும் இதன் மூலம் உலக கோப்பையில் பெரிய அணிகள் இடம் பெரும் ஆட்டங்கள் அனைத்தும் விறுவிறுப்பானதாக இருக்கும் என்று செய்தி வெளியிட்டிருந்தது வரவேற்க்கத்தக்கது.

Thursday, February 24, 2011

உலகக் கோப்பை - 2

இங்கிலாந்து – நெதர்லாந்து.

செவ்வாய் கிழமை நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தும், நெதர்லாந்தும் மோதிக் கொணட்ன..

இதற்கு முந்திய ஆட்டங்கள் எல்லாம் மல்யுத்த போட்டியில் அனுபவம் வாய்ந்த குண்டான நபரும் அனுபவமற்ற ஒல்லியான நபரும் மோதிக் கொண்டால் என்ன ஆகும்? அந்த நிலமைதான் கிரிக்கெட்டிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கெதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து ஆடியது இங்கிலாந்துக்கு சவால் விடும் வகையில் இருந்தது.

முதலில் ஆடிய நெதர்லாந்து 292 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இங்கிலாந்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அணியின் நானகாவதாக களம் இறங்கிய டஸ்சாட் சதம் அடித்து அசத்தினார். 12வது ஓவரில் களம் இறங்கிய டஸ்சாட் 48வது ஓவர் வரை நின்று 110 பந்துகளில் 119 ரன்கள் (9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து) இங்கிலாந்து வீரர்களை சோதனைக்குள்ளாக்கினார்.

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்தின் துவக்கம் சிறப்பாக இருந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டிராஸ் மற்றும் பீட்டர்சன் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். இது அந்த அணிக்கு வெற்றி பெற அடித்தளம் இட்டது. பின்னர் வந்த வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஓவருக்கு சராசரி 6 ரன் ரேட் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்..

43வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 241 ரன்னிற்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது. 42 பந்துகளில் 52 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் விருவிருப்பாக இருந்தது.. ஆனால் நெதர்லாந்து அணியின் அனுபவமற்ற பவுலிங்கை பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்து சுலபமாக வெற்றிப் பெற்றது. முக்கியமான கட்டத்தில் நெதர்லாந்து விக்கெட் எடுக்க தவறிவிட்டனர். மேலும் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து காலிங்வுட்டும், போபராவும் 8 பந்துகள் மீதம் இருக்கும்போதே இலக்கை எட்டியது. ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. குறைந்த பட்சம் கடைசி பந்து வரை ஆட்டம் நடந்திருந்தால் விறுவிறுப்பான ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியாவது ரசிகர்களுக்கு இருந்திருக்கும். இருந்தாலும் இதற்கு முந்தைய ஆட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த ஆட்டம் பரவாயில்லை.

பாகிஸ்தான் – கென்யா.

கென்யா அணியின் ஆட்டத்தில் முன்னேற்றமில்லை நியுசிலாந்திற்கெதிறான ஆட்டத்தில் தோற்றதை போலவே மறுபடியும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் இருந்தது.

பாகிஸ்தான் துவக்க ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுக்கவில்லை என்றாலும் பின்னர் வந்து வீரர்கள் சிறப்பாக ஆடி 300 ரன்களை கடந்து 317 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.

எவ்வளவு இலக்கு இருந்தாலும் நாங்கள் எங்கள் வழக்கப்படிதான் ஆடுவோம் என்று கென்யா வீரர்கள் சபதம் எடுத்தது போல் மட மடவென்று அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். அப்ரிடி நன்றாக பௌலிங் செய்தார் வேகமாக 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 33,1 ஓவரில் கென்யா அணி 112 ரன்னிற்கு ஆட்டம் இழந்தது. நியுசிலாந்துக்கு எதிராக 69 ரன் இரட்டை இலக்கத்தில் ஆல் அவுட்டாகியிருந்தது. இப்போது சிறிது முன்னேற்றம் மூன்று இலக்க எண்ணில் 112 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனதுதான்.

வியாழன் நடக்கும் ஆட்டத்தில் மேற்கு இந்திய அணியும், தென் ஆப்ரிக்காவும் மோத இருக்கின்றன. பார்மில் இல்லாத மேற்கு இந்திய அணியை சிறந்த நிலையில் இருக்கும் தென் ஆப்ரிக்கா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

உலக கோப்பை - 2011 - 1

முதல் மேட்சில் இந்தியாவும் பங்களாதேஷும் மோதிக் கொண்டன. ஆட்டத்திற்கு முன்பே ஷேவாக் இந்த முறை பங்களாதேஷை பழி தீர்ப்போம் என்று கூறியிருந்தார். கடந்த உலக கோப்பையில் முதல் சுற்றில் பங்களாதேஷிடம் தோற்றதை அவர் மற்ககவில்லை என்பதை அவர் ஆட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் ஒரு பக்கம் பஙகளாதேஷின் பவுலிங்கை அடித்து துவைக்க மறுபுறம் வீராட் கோளி அலசி காயப் போட்டார். இந்தியாவின் ஸ்கோரைப் பார்க்கும்போதே ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது இந்தியா வெற்றி பெறும் என்று அதை ஒப்புக்கொள்ளும் விதத்தில் பங்களாதேஷும் ஓவருக்கு ஏழு அடிக்க வேண்டும் என்ற நிலையில் கடைசி வரை ஆறு ரன்னிற்கு கீழேயே அடித்தார்கள். அவர்களுக்கு ஆறுதலா அமைந்தது ஸ்ரீசாந்தின் பவுலிங் மட்டுமே ஒரே ஒவரில் 5 பவண்டிரி கொடுத்தார்.

மற்ற லீக் ஆட்டங்களில் இலங்கையும், நியூசிலாந்தும் மிகப் பெரிய வெற்றியை பெற இந்தியா 83 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெரும்பாலான ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இன்னும் குறைந்த ரன்களில் பங்களாதேஷை சுருட்டியிருக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார்கள். ஆனால் உன்மையில் இந்தியா அந்த பேட்டிங் பிட்சில் சிறப்பாகவே பவுலிங் செய்தார்கள். ஸ்ரீசாந்தை தவிர. அடுத்த ஆட்டத்தில் கண்டிப்பாக ஸ்ரீசாந் இருக்க மாட்டார். அவருக்கு பதில் நெஹரா அல்லது ஒரு ஸ்பின்னர் இடம் பெறலாம்.

நியூசிலாந்து, கென்யா ஆட்டம் ஞாயிறு காலை தொடங்கியது. ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருப்பதற்குள் ஆட்டம் முடிந்து மேன் ஆப் த மேட்ச் கொடுத்து கொண்டிருந்ததை பார்க்கும்போது சோகமாக இருந்தது.. கென்யா ஆமை ஓட்டிற்குள் சுருண்டு கொள்வதைப் போல வெறும் 69 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியுசிலாந்து அதை 8 ஓரில் அடித்து வெற்றி பெற்று விட்டார்கள். சரி இதுதான் சீக்கிரம் முடிந்து விட்டது அடுத்து மதியம் தொடங்கிய இலங்கை, கனடா ஆட்டமாவது முழுதாக ஆடுவார்கள் என்று எதிர்பார்த்தது தவறாக போனது. இலங்கை அடித்த 332 இமாலய ஸ்கோரை அடிக்க முடியாமல் கனடா 37 ஓவரில் 122 ரன்னிற்கு பரிதாபமாக தோற்றுப் போனது. மறுநாள் திங்கட்கிழமை நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலயவிடம் ஜிம்பாபே மோசமாக தோற்றதை பார்க்கும் போது ஏன் இந்த சிறிய அணிகளை எல்லாம் உலக கோப்பை ஆட்டத்தில் சேர்க்கிறார்கள் என்று ரசிகர்களுக்கு தோன்றியது. மறுநாள் அதற்கேற்றாற்போல செய்தியில் அடுத்த உலக கோப்பை ஆட்டத்தில் 10 அணிகள் மட்டுமே போட்டியிடும் என்றும், சிறிய அணிகளை 20./20 உலகக் கோப்பைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் ஐ.சி.சி. அறிவித்திருந்தது. இது சிறிய அணிகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்கு பெரிய அணியுடன் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதே அபூர்வம். இந்த நிலையில் நீ உலக கோப்பையில் ஆட வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் எப்பொழுதுதான் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வது. இலங்கை அணியும் ஆட ஆரம்பித்த புதிதில் விடாமல் தோற்று கொண்டுதான் இருநதார்கள். இன்று உலக கோப்பையை வெல்லும் ஒரு அணியாக கருதப்படும் அளிவிற்கு வளர்ந்து நிற்பதை நாம் மறந்து விடக்கூடாது. இதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை ஐ.சி.சி மறுபரிசீலனை செய்தால் நல்லது.