Friday, March 4, 2011

உலகக்கோப்பை 2011 – தொடர்ச்சி - 7

தென் ஆப்ரிக்கா – நெதர்லாந்து

நேற்று நடைபெற்ற தென் ஆப்ரிக்கா – நெதர்லாந்து ஆட்டம் முழுவதும் தென் ஆப்ரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது பலமான குத்துச் சண்டை வீரன் ஒரே அடியில் எதிராளியை நாக் அவுட் செய்தது போல் இருந்தது இந்த ஆட்டம். ஆளாளுக்கு சதம் காண துடிக்கிறார்கள். இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் இத்தனை சதம் அடித்ததில்லை. போக போக நிறைய சதங்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தென் ஆப்ரிக்கா அணி முதல் ரவுண்டிலேயே எதிரணியை சுலபமாக வீழ்த்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சரிக்கு சரி நின்று ஆடக் கூடியவர்கள் இந்திய அணியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இங்கிலாந்து தற்போது அயர்லாந்திடம் தோற்றுப்போய் மோசமான நிலையில் உள்ளது. மற்றபடி பி குரூப்பில் தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக வருவதில் எந்த சந்தேகமுமில்லை.

பாகிஸ்தான் – கனடா


நேற்று வெற்றிப் பெற கிடைத்த அருமையான வாய்ப்பை கனடா அணி வீணாக்கி விட்டது. முதலில் ஆடிய பாகிஸ்தானை 43 ஓவரில் 184 ரன்களில் சுருட்டி ஆச்சரியப்பட வைத்த அவர்கள் பின்னர் பேட்டிங் செய்யும்போது அதெல்லாம் நாங்கள் தெரியாமல் செய்து விட்டோம் என்பது போல் ஆடினார்கள்..

கனடா இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மட்டுமே எதிரணியை 200 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்திருக்கிறார்கள்.

செமத்தியாக அடி வாங்கிக் கொண்டிருந்த அந்த அணிக்கு நேற்று கிடைக்க வேண்டிய வெற்றியை அப்ரிடி தடுத்து விட்டார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. உமல் அக்மலும், மிஸ்பாவும் சேர்ந்து 73 ரன் எடுத்தனர். பின்னர் வந்த அப்ரிடி 20 ரன்கள் மட்டுமே அடித்தார். 43 ஓவர் மட்டுமே ஆடிய பாகிஸ்தான் அணி 184 ரன்களுக்குள் சுருண்டது.

பின்னர் ஆடிய கனடா அணி 33 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 103 என்ற சுமாரான நிலையில் இருந்தது. பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை அப்ரிடி பந்து வீசினால் நாஙகள் கண்டிப்பாக அவுட் ஆகி விடுவோம் என்று சபதம் செய்தது போல அவுட்டாகி சென்றார்கள்.

ரயில் என்ஜின் தடம் மாறினால் எப்படி பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து வரிசையாக கவிழ்ந்து விடுமோ அப்படி வரிசையாக அவுட் ஆகி சென்றார்கள்.

அடுத்த 10 ஓவரில் கடைசி 7 விக்கெட்டுகளை 35 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனார்கள்.

இநத் உலக கோப்பையில் நேற்றைய ஆட்டத்தை கோட்டை விட்ட கனடா அணிக்கு கென்யா அணிக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கிடைத்த வாயப்பை வீணாக்கும் அவர்களுக்கு அது கூட கடினமாக இருக்கப் போகிறது.

No comments:

Post a Comment