Monday, February 28, 2011

உலகக் கோப்பை - தொடர்ச்சி - 4

10 வது ஆட்டம்

ஒரு வழியாக உலகக் கோப்பையில் விறுவிறுப்பான ஆரம்பம் தொடங்கி விட்டது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய இலங்கை-பாகிஸ்தான் ஆட்டம் சமபலம் பொருந்தியதாக இருந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் நல்ல தொடக்கம் கொடுக்கவில்லை என்றாலும் பின்னர் வந்த நடுக்கள ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினார்கள். மிஸ்பா சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முரளிதரன் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். இலங்கை அணியில் இந்த ஆட்டத்தில் மலிங்கா இல்லாதது அவர்களின் பௌலிங்கை பாதித்தது.

277 என்ற ஸ்கோரை இலக்காக ஆடிய இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்கு 76 எடுத்தாலும், பின்னர் 20 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கட்டுகளை இழந்து பரிதாபமாக நிலையை அடைந்தது. பின்னர் சங்ககாரவும் - சில்வாவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சங்ககாரா ஆட்டம் இழந்ததும் ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. இருந்தாலும் கடைசியில் வந்த மேத்யூசும், குலசேகராவும் வேகமாக அடித்து ஆடி ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார்கள். கடைசி ஓவர் வரை போராடிய இலங்கை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று போனது. பாகிஸ்தான கேப்டன் அப்ரிடி சிறப்பாக பௌலிங் செய்தது அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தந்தது.

உலக கோப்பை என்றவுடன் பாகிஸ்தான் வீரர்களுக்கு எங்கிருந்ததுதான் சக்தி வருகிறதோ தெரியவில்லை. 1992 ம் உலக கோப்பை அரை இறுதிக்கே அந்த அணி தட்டுத் தடுமாறிதான் இடம் பெற்றது. அந்த அணி உலகக் கோப்பை வெற்றி பெரும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இம்ரான் கான் அதை சாதித்துக் காட்டினார். இப்போது நிலைமை அப்படி இல்லை அந்த அணி சுலபமாக கால் இறுதிக்கு இடம் பெற்று விடும். காலிறுதியில் பாகிஸ்தானை எதிர் கொள்ளவிருக்கும் அணி கடும் சவலாலை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது நிச்சயம்.

உலகக் கோப்பை - 11 வது ஆட்டம்

இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் விறுவிறுப்பில் இலங்கை - பாகிஸ்தான் ஆட்டத்தை மிகவும் பின்தள்ளி விட்டது.

சென்ற ஆட்டத்தில் சீக்கிரம் ரன் அவுட் ஆன சச்சின் சென்ற ஆட்டத்திற்கும் சேர்த்து இந்த ஆட்டத்தில் வெளுத்து கட்டினார். துவக்கத்தில் சிறிது மெதுவாக ஆட ஆரம்பித்து பிறகு யார் பந்து வீசினாலும் அடித்து துவைத்தார். சச்சினை அவுட் ஆக்க ஸ்ட்ராஸ் பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி போட வைத்தும் சச்சின் சதம் அடிப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

கம்பீர் அவுட் ஆனவுடன் கோலி வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் யுவராஜ் களமிறங்கினார். சரி சச்சின் அவுட் ஆனவுடன் வருவார் என்று பார்த்தால் அப்பொழுது தோனி வந்திறங்கினார். இதுபோன்று பலமுறை தோனி நடந்து கொண்டிருக்கிறார். நன்றாக பார்மில் இருக்கும் ஆட்டக்காரரை பினனுக்கு தள்ளி விட்டு அவரோ யுவராஜோ களம் இறங்கி விடுவார்கள். அதுவும் சுலபமாக ஆடக்கூடிய பேட்டிங் பிச்சுகளில் இவ்வாறு நடந்து கொள்வார்கள். சரி அப்படி முன்கூட்டியே இறங்கி அடிப்பார்கள் என்று பார்த்தால் அதுவும் எப்பொழுதாவதுதான் அடிப்பார்கள். பெரும்பாலும் அவுட் ஆகிவிடுவார்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டது ரெய்னாவும், கோளியும் தான். நேறறு அந்த எப்பொழுதாவதில் ஒரு நாளாக அமைந்தது இருவரும் சேர்ந்து 69 ரன்கள் எடுத்தார்கள். பிறகு வேகமாக ரன் எடுக்கிறேன் பேர்வழி என்று அவுட்டானார்கள். நன்றாக செட்டான இருவரில் ஒருவராவது கடைசி வரை நின்றிருந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை அப்படி நின்றிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். 360 ரன்கள் எதிர்பார்த்த நிலையில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பெறிய இலக்கை தவறவிட காரணமாகிவிட்டார்கள்.

இங்கிலாந்து பௌலிங்கில் பிரஸ்னன் சிறப்பாக பந்து வீசினார். அதுவும் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை மிகப் பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் தடுத்து விட்டார்.

338 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எல்லாம் இங்கிலாந்து வீரர்கள் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொணடிருந்த இந்திய ரசிகர்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டார் ஸ்ட்ராஸ். அவருடன் பெல்லும் சேர்ந்து கொண்டு இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி (பெல்) அடித்துக் கொணடிருந்தார்.

பெங்களூர் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. யார் போட்டாலும் இங்கிலாந்து வீரர்கள் அடித்தார்கள். முக்கியமாக ஸ்ட்ராஸ் ஆடிய ஆட்டம் கிரகாம் கூச்சை நினைவுப்படுத்தியது. அவர் இப்படித்தான் ஸ்வீப் செய்தே நிறைய ரன்களை சேர்த்து விடுவார். 43வது ஓவர் வரை ஆட்டம் இங்கிலாந்தின் பக்கமே இருந்தது.

ஸ்ட்ராஸ் பவர்ப்ளே எடுத்த நேரம் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஆரம்பித்தார்கள். ஜாஹிர் கான் வீசிய பவர்ப்ளேயின் முதல் ஓவரில் ஸ்ட்ராசும், பெல்லும் அவுட் ஆக ஆட்டம் சூடு பிடித்தது.

ஆட்டம் சூடு பிடித்த நேரத்தில் எங்கள் ஏரியாவில் (பம்மல்) கரண்ட் கட் ஆனது. ஆட்டத்தை காண முடியாத கோபம் எல்லாம் ஆற்காடு வீராசாமியின் பேரில் சென்றது. மின்சார வாரியம் செயல்படும் விதம் தமிழக மக்களுக்கு திருப்தியில்லாத நிலையில் உலகக் கோப்பை நடக்கும் இந்த நேரத்தில் தொடர்ந்து இப்படி நடந்தால் கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்சி கவிழுவதற்கு காரணமாகிவிடுவார்கள் என்பதை இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

பிறகு என்ன டிரான்சிஸ்டரை தேடி எடுத்து மேட்ச் கமெண்ட்ரி கேட்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஓவரிலும் விறுவிறுப்பு கூடிகொண்டே சென்றது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி என்ற நிலையில், பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் குழுமியிருந்த அத்தனை பேறும் எழுந்து நின்று கொண்டதை என் மனக் கண்ணால்தான் காண முடிந்தது. ஏன் என்றால் கடைசி பந்தின் போது நானும் எழுந்து நின்று கொண்டிருந்தேன். முனாப் பட்டேல் வீசிய அந்த பந்தை ஸ்வானால் ஒரு ரன்னை மட்டுமே எடுத்ததை கேட்கும்போது பயங்கர த்ரில்லிங் ஆக இருந்தது.

இந்தியா வெற்றி பெறாமல் ஆட்டம் டை ஆனது ஏமாற்றம் அளித்தாலும் எப்படியோ டை ஆவது செய்தார்களே என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

1 comment:

  1. இந்தியா வெற்றி பெறாமல் ஆட்டம் டிரா ஆனது ஏமாற்றம் அளித்தாலும் எப்படியோ டிரா ஆவது செய்தார்களே என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

    ஒன் டே மேட்ச் எப்போதும் டிரா ஆகாது. டிரா என்பது தவறு. டை (Tie) என்றே சொல்லவேண்டும்

    ReplyDelete